கிருஷ்ணகிரி: ஒரு குடும்பம் ஆள்வதற்கு அதிமுக ஒரு போதும் தலை வணங்காது என்று சசிகலாவின பெயரை குறிப்பிடாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

கிருஷ்ணகிரியில் இன்று அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சிக்கு எதிராக சதித் திட்டம் தீட்டி வருகிறார்கள். அவர்களை ஒரு போதும் அதிமுகவில் இணைக்க முடியாது.

கட்சி ஒரு போதும் அவர்களுக்கு தலைவணங்காது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க முடியாது. அடிப்படை தொண்டன்தான் இனி அதிமுகவில் முதல்வராக முடியும். திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார். பத்தாண்டுகளாக கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து  நீக்கப்பட்ட தினகரன் இப்போது கட்சியை கைப்பற்ற சூழ்ச்சி வலை பின்னி கொண்டிருக்கிறார்.

அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து அந்த சூழ்ச்சி வலையில் சிக்கக் கூடாது. எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து நிறைவேற்ற வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றி இப்பொழுது பிரம்மாண்ட கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

எண்ணேகோல் புதூர் திட்டத்திற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விரைவில் அத்திட்டம் நிறைவேற்றப்படும். அதேபோல பாரூர் ஏரியிலிருந்து ஊத்தங்கரையில் உள்ள 30 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.