அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கைது : கரூரில் பதற்றம்

Must read

ரூர்

ரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பை எதிர்த்து முற்றுகை செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த 12 உறுப்பினர்களைக் கொண்ட கரூர் மாவட்ட ஊராட்சி குழு தேர்தலில் அதிமுக கூட்டணி 9 இடங்களையும் திமுக 3 இடங்களையும் வென்றது.  அதிமுகவைச் சேர்ந்த கண்ணதாசன் தலைவராகவும் தானேஷ் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.  துணைத்தலைவர் தானேஷ் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு கிருஷ்ணாராஜ்புரம் சட்டப்பேரவை தேர்தலில் நின்று தொல்ல்வி அடைந்தார்.

கடந்த 9 ஆம் தேதி அவர் ராஜினாமா செய்த 8 ஆம் வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்து திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.  இதனால் திமுகவின் பலம் 4 மற்றும் அதிமுக பலம் 8 ஆனது.   இன்று ஊராட்சி துணைத்தலைவர்  பதவிக்கு ரகசிய தேர்தல் அறிவிக்கப்பட்டது.   இதையொட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தேர்தல் அலுவலரிடம் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என மனு அளித்திருந்தார்.

துணைத் தலைவர் தேர்தல் இன்று மதியம் 2.30க்கு நடக்க இருந்தது.   தேர்தலையொட்டி திமுக மற்றும் அதிமுகவினர் அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்தனர்.  அவர்களில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரும் இருந்தார்.  தேர்தல் அலுவலர் மந்திராசலம் இந்த தேர்தலை ஒத்தி வைப்பதாக அறிவித்து விட்டு  அங்கிருந்து கிளம்ப காரில் ஏறினார்.   அவரை முற்றுகையிட்ட எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் ஆதரவாளர்கள் அவரிடம் வாக்குவாதம் செய்தனர்.

கார் முன் அமர்ந்து அவர்கள் தர்ணா செய்தனர்.  இதையொட்டி காவல்துறையினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.    இதையடுத்து கரூரில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.  கரூரில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 

More articles

Latest article