நெட்டிசன்:
எம்,ஜி,ஆர் இதே அக்டோபர் மாதம் 17/1972 ம் தேதியன்றுதான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் புதுக் கட்சியைத் தொடங்கினார். அறிஞர் அண்ணாவின் பெயரையும், அவரது கொள்கைகளையும் தி.மு.க. தலைமை இருட்டடிப்புச் செய்வதாகக் கூறி, தாம் தொடங்கிய புதிய கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பெயரைச் சூட்டினார் எம்,ஜி,ஆர்.
downloadஇந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியது குறித்த அறிவிப்பை முன்னாள் மேலவை உறுப்பினரான அனகாபுத்தூர் இராமலிங்கம்தான் வெளியிட்டார் .அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை (கறுப்பு, சிவப்பு, நடுவில் அண்ணாவின் உருவம்) எம் ஜி ஆரின் கருத்துப்படி அமைத்துக் கொடுத்தவர் மற்றொரு முன்னாள் மேலவை உறுப்பினரான ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து ஆவார்.
புதிய இயக்கத்தின் பெயரையும் கொடியின் அமைப்பையும் அறிவித்த எம்.ஜி.ஆர் , அந்தப் புதிய கட்சியின் அமைப்புச் செயலாளராகத் தென்னகம் நாளேட்டின் ஆசிரியரான கே.ஏ.கிருஷ்ணசாமியை நியமித்தார்.தி.மு.க.வில் இருந்து இலட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் விலகி அண்ணா தி.மு.க.வில் சேர்ந்தனர். எம் ஜி ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியபோது அவர் ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினராய் இருந்தார். எனவே, சட்டமன்றத்தில் அப்பொழுது அ.தி.மு.க.வின் பலம் ஒன்றாய் இருந்தது.
download-1
அடுத்த சில நாட்களிலேயே எஸ்.எம். துரைராஜ் குழ. செல்லையா, சௌந்தரபாண்டியன், ஜி.ஆர். எட்மண்ட் முதலிய சட்டமன்ற உறுப்பினர்கள் புரட்சித் தலைவரின் அ.தி.மு.க.வில் சேர்ந்து அதன் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தினர். அப்பொழுது கடசித்தாவல் தடைச்சட்டம் பிறப்பிக்கப் படவில்லை. அதனால் அடுத்தடுத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அ.தி.மு.க.வில் சேரவும், சேர்ந்த பின்னரும் நீடிக்கவும் சாத்தியப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களான நாஞ்சில் மனோகரன், எஸ்.டி. சோமசுந்தரம், பாவலர் முத்துசாமி, கே.ஏ. கிருஷ்ணசாமி முதலியோரும் தொடக்கத்திலேயே அண்ணா தி.மு.க.வில் சேர்ந்திருந்தனர். அவர்களுள் பாவலர் முத்துசாமியைக் கழகத்தின் முதல் அவைத்தலைவராக நியமித்தார் எம் ஜி ஆர்.பின்னர் சி.வி. வேலப்பன். கே.காளிமுத்து, கோவை செழியன், ஜி. விஸ்வநாதன் முதலிய சட்டமன்ற உறுப்பினர்களும் புரட்சித் தலைவரின் அணியில் இணைந்தனர்.
இவ்வாறாக எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கி 44 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று- 17-ந்தேதி 45-வது ஆண்டு தொடங்குகிறது