ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லுர் பகுதியில் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,  அங்கு கிடைக்கும் பொருட்களை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில்,  ஸ்ரீவைகுண்டம் சாலையில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு பணியில் 100க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்பு வாள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன. தற்போது அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து அருங்காட்சியகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. மேலும்,  இங்கு கிடைக்கப்பெற்ற பொருட்களை எடுத்த இடத்திலேயே கண்ணாடித்தளம் மேல் நின்று கொண்டு கீழே பார்வையிடும் (On Site) “உள்ளது உள்ளபடியே” என்ற அடிப்படையில் இங்கு பார்வை கூடம் அமைக்கப்பட உள்ளது. மேலும், ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலை ஓரத்தில் 5 ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல்முறையாக இந்த பார்வைக்கூடம் அமைக்கப்பட்ட உள்ளது.  இந்த  பார்வைக்கூடத்தை  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  பார்வையிட்டதுடன், அகழ்வராய்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கும் மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டடினார்.  இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி , அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், “பாரத கலாச்சரததை பாதுகாக்க பிரதமர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் என அறிவித்தோம். உலகத்திலேயே மிக பழமையான பகுதி தொடர்ந்து வாழ்ந்து வருபவர்களின் கலாச்சாரத்தை அகழாய்வு மூலம் வெளிக்கொண்டு வருகிறோம். 3,4 காலகட்டங்களாக ஆராய்ச்சி நடைபெற்றுள்ளது. இங்கிருந்து பல நாடுகளுக்கு வணிகம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் மனிதர்களை புதைத்த இடங்களும் இங்கு உள்ளது. அவர்கள் உபயோகப்படுத்திய பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது. 3,500 ஆண்டுகளுக்கு முன்னதாக நெல்லும், திணையும் உபயோகப்படுத்திய பொருட்களை நமது தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்
அலெக்சாண்டர் ரியா காலத்தில் இருந்து தற்போது வரை அகழாய்வு மேற்கொண்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தி மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அலெக்சாண்டர் ரீயா காலத்தில் அகழாய்வு மேற்கொண்ட பொருட்களை பெர்லின் போன்ற வெளிநாட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர் அதனையும் இந்தியாவிற்கு கொண்டுவந்து ஆதிச்சநல்லூரில் காட்சிப்படுத்தப்படும். ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் ஆன்சைட் அருங்காட்சியகத்திற்கு எந்த தடையும் இன்றி போதுமான நிதியை மத்திய அரசு அளிக்கும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.