டில்லி

தானி துறைமுகத்தில் ரூ.20000 கோடி மதிப்புள்ள போதை மருந்து பிடிபட்டதால் நிர்வாகம் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள முந்த்ரா துறைமுகம் அதானியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது.   கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி இங்கு சுமார் 3000 கிலோ எடையுள்ள ஹெராயின் போதை மருந்து பிடிபட்டுள்ளது.   இந்த மருந்து சட்டவிரோதமாகப் போதை மருந்து தயாரிப்பதில் முன்னோடியாக விளங்கும் ஆப்கானிஸ்தானிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த மருந்து சுங்கத்துறை மற்றும் வருமான புலனாய்வு துறை ஆகியோரின் சோதனையில் பிடிபட்டுள்ளது.   இதன் மதிப்பு ரூ.20000 கோடி எனக் கூறப்படுகிறது.   இந்த சோதனையைத் தொடர்ந்து நாடெங்கும் இருந்து 8 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.   

இதையொட்டி சமூக வலைத்தளங்களில் அதானி குழுமத்தைக் குறித்து கடும் விமர்சனம் எழுந்தது. அதானி நிர்வாகம் துறைமுகத்தை நிர்வகிப்போருக்கு எந்த ஒரு கப்பலையும் சோதனையிட அதிகாரம் இல்லை எனவும்  துறைமுகத்தை நடத்த மட்டுமே உரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.  மேலும் முந்த்ரா வழியாகப் பல்லாயிரம் டன் சரக்குகள் சென்று வருவதாகவும் நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள புதிய விதிமுறையில், “வரும் நவம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் இரான்ம் ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் சரக்கு கப்பல்களை அதானி துறைமுக நிர்வாகம் அனுமதிக்காது.  இந்த கப்பலில் வரும் சரக்குகள் கையாளப்பட மாட்டாது.  இந்த விதிமுறை அதானி குழுமம் நிர்வகிக்கும் அனைத்து துறைமுகங்களுக்கும் பொருந்தும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.