சண்டிகர்: அரியானா மாநிலத்தில் சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில், 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் திடீரென தங்களத ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளனர். இதனால்,, நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அரியானபா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்துள்ள சுயேச்சை எம்எல்ஏக்களில் 3 பேர் தங்களது ஆதரவை விலக்கி கொள்வதாகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அரியானா மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 40 இடங்களிலும், அம்மாநிலக் கட்சியான ஜனநாயக் ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், இந்திய தேசிய லோக் தள் மற்றும் ஹரியானா லோகித் கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றிபெற்றிருந்தது. இதர 7 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றிபெற்றிருந்தனர். இதையடுத்து, பாஜகவும், ஜனநாயக் ஜனதா கட்சியும் கூட்டணி ஆட்சியை அமைத்தன.

இந்த நிலையில், மக்களவை தொகுதிப் பங்கீடு மற்றும் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பாஜக கூட்டணியில் இருந்து ஜனநாயக் ஜனதா கட்சி விலகுவதாக துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா க 2024  மார்ச் மாதம் அறிவித்தார். ஜனநாயக் ஜனதா கட்சி விலகியதை அடுத்து, முதல்வராக இருந்த மனோஹர்லால் கட்டார் மாற்றப்பட்டு, நயாப் சிங் சைனி புதிய முதல்வராக பதவியேற்றார்.

இந்த நிலையில், பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த 3 சுயேச்சைகள் தங்களது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளனர். அதன்படி,   பூண்ட்ரி தொகுதியைச் சேர்ந்த ரந்தீர் கோலன், நிலோகேரியைச் சேர்ந்த தரம்பால் கோண்டர் மற்றும் தாத்ரியைச் சேர்ந்த சோம்பிர் சிங் சங்வான் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள்   தங்கள் ஆதரவை வாபஸ் பெற்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர்.

இந்த மூன்று பேரும் அரியானா மாநிலம்  ரோஹ்டக்கில்  செய்தியாளர்களை சந்தித்தபோது,   “பல்வேறு பிரச்சினைகளை பாஜக அரசு கையாள்வதில் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்ததுடன்,  அரசாங்கம் அமைக்க பாஜகவுக்கு எங்கள் ஆதரவு தேவைப்படும் நேரத்தில் நாங்கள் மீண்டும் மீண்டும் அழைக்கப்பட்டோம். மனோகர்லால் கட்டார் ஆட்சியில் இருக்கும் வரை நாங்கள் ஆதரிப்போம் என்று முடிவு செய்திருந்தோம். அவர் ஆட்சியில் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளாக, நாங்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தோம். இன்று மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் உச்சத்தில் உள்ளது.  விவசாயிகளின் நலன் கருதி அரசின் ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என்று கூறியுள்ளனர்.

  90 உறுப்பினர்களைக் கொண்ட அரியாணா சட்டமன்றத்தின் தற்போதைய பலம் 88, அதில் பாஜக 40 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது. ஏற்கனவே கூட்டணி கட்சியான ஜேஜேபி எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்ற நிலையில், தற்போது சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால்,  முதல்வர் நயாப் சிங் சைனி அரசாங்கம் இப்போது சிறுபான்மை அரசாங்கமாக உள்ளது.

சைனிக்கு முதல்வர் பதவியில் ஒரு நிமிடம் கூட இருக்க உரிமை இல்லை என்பதால், அவர் தனது ராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டும்” என்று  காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது.

தற்போது நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அரியானா மாநிலத்தில் பாஜக அரசுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.