ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன குற்றச்சாட்டுகளுக்கு தனது 413 பக்க விளக்கத்தை அளித்துள்ள அதானி குழுமத்துக்கு ஹிண்டன்பர்க் பதிலடி கொடுத்துள்ளது.

“அந்நியச் செலாவணி சட்டங்கள் மற்றும் பங்கு பத்திர விதி மீறல்கள் செய்ததாக எங்கள் நிறுவனத்தின் மீது அதானி குழுமம் குற்றம் சாட்டிய நிலையில் எங்கள் நிறுவனம் எந்த சட்ட விதிகளை மீறியது என்பது குறித்து இந்த 413 பக்க விளக்கத்தில் ஒரு இடத்தில் கூட அதானி நிறுவனம் குறிப்பிடவில்லை” என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறியுள்ளது.

அதானியின் ‘413 பக்கம்’ பதிலில் 88 கேள்விகளுடன் கூடிய எங்கள் அறிக்கை குறித்த பதில் சுமார் 30 பக்கங்கள் மட்டுமே இருந்தன.

53 பக்கங்களில் உயர்மட்ட நிதிநிலை, பொதுத் தகவல்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர் மற்றும் பாதுகாப்பான காய்கறிகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதம் போன்ற அதானி நிறுவனத்தின் முயற்சிகள் குறித்த பொருத்தமற்ற விவரங்கள் இடம்பெற்றிருந்தது.

மீதமுள்ள 330 பக்க பதிலில் நீதிமன்றப் பதிவுகள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒரு முதல் தலைமுறை நிறுவனம் குறுகிய காலத்தில் இத்தனை அசுர வளர்ச்சி அடைந்தது குறித்து மக்கள் ஏற்கனவே கேள்வி எழுப்பி வரும் நிலையில், மோசடியான பங்கு பரிவர்த்தனை மூலம் அதானி குழுமம் வளர்ச்சி அடைந்துள்ளதாக வெளிநாட்டு ஆய்வு நிறுவனம் குற்றாச்சாட்டு எழுப்பியுள்ளது.

ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப்படும் என்று கூறிவிட்டு உப்புச்சப்பற்ற 413 பக்க விளக்கத்தை அதானி நிறுவனம் அளித்திருப்பது இந்திய மக்களுக்கு வேதனை அளித்திருப்பதோடு இதன் தாக்கம் சமூக வலைத்தளத்திலும், பங்குச் சந்தையிலும் இன்று எதிரொலித்தது.

“அதானி குழுமத்தின் இந்த விளக்கம் முக்கிய பிரச்சனையில் இருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி என்றும் தேசியம் என்ற போர்வையில் மோசடி குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கும் முயற்சியை கெளதம் அதானியும் அவரது அதானி குழும நிறுவனங்களும் மேற்கொண்டுள்ளது” என்று ஹிண்டன்பர்க குறிப்பிட்டுள்ளது.

மேலும், “இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம் மற்றும் அற்புதமான எதிர்காலத்துடன் வளர்ந்து வரும் வல்லரசு என்பதை உறுதியாக நாங்கள் நம்புகிறோம். தேசியம் என்ற போர்வையில் தேசத்தை திட்டமிட்டு சூறையாடும் எந்த ஒரு முயற்சியையும் நாங்கள் அனுமதிப்பதில்லை. அதானி குழுமத்தால் இந்தியாவின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக நாங்கள் முழுமையாக நம்புகிறோம்” என்று ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் மோசடி செய்வதால், மோசடியில்லை என்று ஆகிவிடாது, மோசடி என்பது மோசடி தான் என்று ஹிண்டன்பர்க் ஆணித்தரமாகக் கூறியுள்ளது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் இந்த பதிலைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்து வருகிறது. இதனையடுத்து அதானியின் சொத்து மதிப்பு மொத்தம் 5 லட்சம் கோடி ரூபாய் சரிவைச் சந்தித்திருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஹிண்டன்பெர்க் நிறுவன சவால் … நீதிமன்றம் செல்வாரா அல்லது சரிவை ஏற்படுத்துவாரா அதானி ?