‘ஸ்ரீநகர்: குமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரை என்ற பாரத் ஜோடோ யாத்திரை 29ந்தேதி (நேற்றுடன்) நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, இன்று  ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங். எம்.பி ராகுல் காந்தி தேசியக்கொடியை ஏற்றினார். இன்று மாலை, ஸ்ரீநகரில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் திமுக, தேசியவாத காங்கிரஸ், ஆர்.ஜே.டி. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பி.யுமான  ராகுல் காந்தி,  நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், 2024 பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை மேற்கொண்டார். இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து,  இந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மராட்டியம், மத்திய பிரதேசம், அரியானா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை கடந்து தனது இறுதி இலக்கான காஷ்மீர் மாநிலத்தை எட்டியுள்ளது.

3,500 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தை கடந்துள்ள ராகுலின்  இந்த யாத்திரையில் பல்வேறு அரசியல் தலைவர்கள், பொருளாதார வல்லுனர்கள், அறிவியல்-தொழில்நுட்ப அறிஞர்கள், திரைத்துறை, விளையாட்டுத்துறை சாதனையாளர்கள் என ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். அத்துடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்களும் ராகுல் காந்தியுடன் தினந்தோறும் யாத்திரையில் பங்கேற்று வந்தனர். அத்துடன் ஏராளமான பொதுமக்களும் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

நாடு முழுவதும் நடைபெற்ற ராகுலின் நடைபயணம் காங்கிரஸ் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இன்று ஸ்ரீநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து தனது யாத்திரையை  முழுமையாக நிறைவு செய்தார்.. இதைத் தொடர்ந்து இன்று மாலை அங்குள்ள எஸ்.கே. மைதானத்தில் பிரமாண்ட நிறைவு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது.

இன்றைய பொதுக்கூட்டத்தை ரமாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. இதில் பங்கேற்குமாறு 21 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக, திமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த கட்சிகளின் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். அத்துடன் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.