அதானி நிறுவனம் பங்கு வர்த்தகத்தில் மோசடி செய்ததாக ஹிண்டன்பெர்க் என்ற அமெரிக்க பங்கு வர்த்தக ஆலோசனை நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து இந்த நிறுவனம் மீது வழக்கு தொடருவதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக அதானி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தையில் பதிவுசெய்துள்ள நிறுவனங்களின் நிதி மோசடி குறித்த தடயங்களை ஆய்வு செய்து அந்நிறுவனங்களின் ஏமாற்று வேலைகளை அறிக்கையாக வெளியிட்டு அவர்களுக்கு சவால் விடுவதை ஹிண்டன்பெர்க் என்ற அமெரிக்க நிறுவனம் செய்து வருகிறது.

2017 ம் ஆண்டு நதன் ஆண்டர்சனால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் இதுவரை சுமார் 16 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தில்லுமுல்லுகளை வெளிக்கொண்டுவந்துள்ளது.

2020 ம் ஆண்டு மின்சார வாகனங்கள் தயாரிக்கும் ‘நிகோலா’  நிறுவனத்தின் மீது இவர்கள் அளித்த அறிக்கையைத் தொடர்ந்து ஒரு சில மாதங்களில் இவர்கள் கூறியது போல் அந்த நிறுவனத்தின் பங்கு அதளபாதாளத்திற்குச் சென்று பரபரப்பை உண்டாக்கியதை அடுத்து ஹிண்டன்பெர்க் நிறுவன கணிப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியது.

பங்கு வர்த்தகத்தில் ஷார்ட் செல்லர் (Short seller) என்று சொல்லப்படும் குறுகியகால முதலீடு மூலம் இந்த நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுவதாகவும் அதன்மூலம் கிடைக்கும் கொள்ளை லாபங்களை ஷெல் கம்பெனிகள் எனும் இணை / துணை நிறுவனங்கள் மூலம் தங்கள் சொந்த கணக்கிற்கு மாற்றி உல்லாச உலகம் தங்களுக்கு எப்போதும் சொந்தம் என்பது போல் இந்த நிறுவனங்களும் அதன் நிறுவனர்களும் செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டுகிறது.

சந்தையில் மதிப்பு குறைந்த அல்லது குறைந்துவரும் நிறுவனங்களின் பங்குகளை குறைவான விலைக்கு வாங்கும் இந்த பெரு நிறுவனங்கள் பிறகு தங்கள் சொந்த நிறுவனத்தின் வளர்ச்சியையும் பங்கு மதிப்பையும் காட்டி புதிய முதலீடுகளுக்காக, சிறு குறு நிறுவனங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒரு பெரும்தொகையை வங்கிகளில் கடனாகப் பெற்று மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை பேரழிவை ஏற்படுத்துவதாகக் கூறுகிறது.

ஆயிரக்கணக்கான கோடிகளை கடனாகப் பெற்ற பெருநிறுவனங்கள்  இதைக் கொண்டு சந்தையில் மதிப்பு குறைந்து வரும் நிறுவனங்களில் முதலீடு செய்யப் போவதாக செய்திகள் வெளியாகும் நிலையில் அந்த அந்நிய நிறுவனத்தின் பங்குகள் உயர்வு பெரும் நேரத்தில் தாங்கள் வைத்திருக்கும் பங்குகளை விற்றுவிட்டு பணமாக்குகின்றன.

இதனைத் தொடர்ந்து அந்நிய நிறுவனத்தை இவர்கள் வாங்கப்போவதில்லை என்பது தெரியவந்ததும் மீண்டும் அதன் பங்குகள் விலை சரியத் தொடங்கும். அப்போது குறைந்த விலையில் மீண்டும் பங்குகளை வாங்கி தனக்குரிய பங்குகளை அப்படியே தக்கவைத்துக் கொண்டு மோசடியாக லாபம் ஈட்டுகின்றன.

தவிர, இந்த லாபத்தை காட்டி தங்கள் சொந்த நிறுவன பங்குகளின்  சந்தை மதிப்பை இந்த பெருநிறுவனங்கள் அதிகரித்துக் காட்டி கடனாக பெற்ற பணத்தை வேறு நிறுவனங்களில் ‘பார்க்’ செய்கின்றன.

ஒரு குறுகிய காலத்தில் நடைபெறும் இந்த ஷார்ட் செல்லிங் வர்த்தக சுழற்சி மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியாக லாபம் ஈட்டுகின்றன இந்த பெருநிறுவனங்கள்.

மேலும், இந்த பணத்தை பொருளாதார சுதந்திரம் என்ற பெயரில் வரிச் சலுகைகளின் சொர்கபூமியாக திகழும் நாடுகளில் உள்ள தங்கள் ஷெல் கம்பெனிகள் மூலம் தங்கள் சொந்த கணக்கில் அடைகாத்து வருகின்றன.

உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பிட்காயின் எனப்படும் க்ரிப்டோ கரன்சி உள்ளிட்டவற்றில் தனது பணத்தை முதலீடு செய்துள்ள போதும் கடந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிந்து கின்னஸ் சாதனை படைத்தது.

ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை எலான் மஸ்க் வாங்கப்போவதாக முதலில் தகவல் வெளியான நிலையில் இது ஷார்ட் செல்லிங் முயற்சி என்று ஹிண்டன்பெர்க் முதலில் சவால் விட்டது.

பின்னர், ட்விட்டர் மற்றும் எலான் மஸ்க் இடையே வழக்கு வாய்தா என்று சென்றதை அடுத்து இதனை லாங் செல்லிங் (long-selling) எனும் மஸ்க்-கின் நீண்டகால திட்டம் என்று சவால்விட்டுள்ளது.

இதனை அடுத்து ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள பங்குகளை எலான் மஸ்க் எப்போது வேண்டுமானாலும் விற்க நேரிடலாம் என்ற சூழல் எழுந்ததைத் தொடர்ந்து அவரது நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் சரிந்து அவரது பெயர் கின்னஸ் புத்தகம் வரை சென்றுள்ளது.

இந்த நிலையில் அதானி நிறுவனத்தின் நிதி முதலீடுகள் குறித்த தடயங்களை இரண்டு ஆண்டுகளாக ஆய்வு செய்துவந்ததாகவும்  அந்நிறுவனம் ஷார்ட் செல்லிங் பங்கு மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் ஹிண்டன்பெர்க் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், இது வரலாற்றில் மிகப்பெரிய கார்ப்பரேட் மோசடி என்று உறுதியாக நம்புவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனால் நேற்று ஒரேநாளில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பலமடங்கு வீழ்ச்சி அடைந்தது இதனால் அதானி நிறுவனத்துக்கு ஒட்டுமொத்தமாக சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மொரிசியஸ், ஐக்கிய அரபு நாடுகள், கரிபியன் தீவுகள் உள்ளிட்ட நாடுகளில் உள்ள 38 ஷெல் கம்பெனிகள் அதானி குழும நிறுவனங்களுடன் தொடர்புடையது என்று குறிப்பிட்டுள்ள ஹிண்டன்பெர்க்.

இந்த நிறுவனங்களை அதானி குழுமத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ள அவரது உறவினர்கள் நிர்வகித்து வருவதாகவும் இந்த ஷெல் கம்பெனிகள் மூலம் வெட்ககேடான மோசடியில் ஈடுபட்டுள்ளது ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

எல்.ஐ.சி. உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை நிறுவனங்கள் மற்றும் இந்திய வங்கித்துறை நிறுவனங்கள் பலவும் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் நிலையில் நேற்று ஒரேநாளில் அதானி நிறுவனத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பங்குச் சந்தை ஆட்டம் கண்டுள்ளது.

இதனை சமாளிக்க அதானி நிறுவனம் ஹிண்டன்பெர்க் நிறுவனம் மீது வழக்கு தொடர அமெரிக்க மற்றும் இந்திய சட்டங்களில் வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளது.

அப்படி வழக்கு தொடர்ந்து அதானி நிறுவனத்தின் தில்லுமுல்லு நீதிமன்றத்தில் வெட்டவெளிச்சமாக்கப்படும் பட்சத்தில் வங்கித்துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஆட்டம் காண்பதுடன் சாமானிய மக்களையும் பாதிக்கும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக பங்குச் சந்தை மற்றும் நிதி முதலீட்டு ஆலோசகர்கள் கூறிவருகின்றனர்.

இருந்தபோதும் ஹிண்டன்பெர்க் நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை அதானி நிறுவனம் மட்டுமன்றி இந்திய பங்குச் சந்தையை நிர்வகிக்கும் செபி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பெரும்சவாலாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.