இந்தோனேசிய துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யும் போது 1.9 மில்லியன் டாலர் என்று மதிப்புக்காட்டப்பட்ட நிலக்கரி கடல் மார்க்கமாக இந்தியா வந்து இறங்கியதும் அதன் இறக்குமதி மதிப்பு 4.3 மில்லியன் டாலர் என்று உயர்த்திக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் மின் கட்டணத்தை உயர்த்தி இந்திய மக்கள் மற்றும் தொழில்துறையினரை அதானி குழுமம் சுரண்டி கொழுக்கிறது.

2019 ம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை 30 க்கும் மேற்பட்ட சரக்கு கப்பலில் வந்து சேர்ந்த நிலக்கரியின் மதிப்பு பலமுறை பலமடங்கு உயர்த்திக்காட்டி அதானி குழுமம் கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளது.

இதுகுறித்து பைனான்சியல் டைம்ஸ் இதழ் நடத்திய விசாரணையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

அதானி நிறுவனம் கொண்டுவந்த நிலக்கரி பெரும்பாலும் குஜராத் மாநிலத்தில் உள்ள அதானி நிறுவனத்துக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்காக துபாய், சிங்கப்பூர், தைப்பே (தைவான்) ஆகிய இடங்களில் இருந்து பெரிதும் அறியப்படாத பினாமி நிறுவனங்கள் போல் செயல்படும் நிறுவனங்கள் பெயரில் ரசீதுகளை வழங்கியுள்ளதுடன் இந்த இடைத்தரகு நிறுவனங்களுக்கும் கமிஷன் வழங்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை குஜராத் மாநில மின் உற்பத்திக் கழகம், ரிலையன்ஸ், ஜெ எஸ் டபுள்யூ, தமிழ்நாடு மின்சார வாரியம், தேசிய அனல் மின் கழகம் என பல நிறுவனங்களுக்கும் விற்று கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளது.

தவிர, ரூ. 9902 கோடி மதிப்புள்ள மின்சாரத்திற்கு மோசடியாக உயர்த்தப்பட்ட கட்டணம் ரூ. 13806 கோடியை குஜராத் அரசிடம் இருந்து வாங்கியுள்ளது.

நிலக்கரியின் மதிப்பை பலமடங்கு உயர்த்தி லாபம் சம்பாதித்ததோடு மட்டுமல்லாமல் அதானி நிறுவனம் மூலம் மாநில அரசுக்கு விற்கப்பட்ட மின்சாரத்திற்கும் கூடுதல் விலை நிர்ணயித்து மின்சார கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி பொதுமக்கள் தலையில் மிளகாய் அரைத்து வருகிறது என்று அந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

இப்படி ஒட்டுமொத்த இந்திய மக்களையும் வாட்டி வதைத்து உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள அதானி, வெளிநாட்டு ஊடகங்கள் தனது நிறுவனத்தின் வளர்ச்சியைக் கெடுக்கப்பார்ப்பதாக நீலிக்கண்ணீர் வடித்து வருவது வேடிக்கையாக உள்ளது.