சென்னை மீஞ்சூர் அருகில் அமைந்துள்ள அதானி நிறுவனத்திற்கு சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு அருகில் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென்று அதானி நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தேசிய நீர் வழித்தட அலுவலக இயக்குனருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் இவ்வாறு கோரிக்கை வைத்துள்ளது.

மீனவர்கள் இந்த பகுதியில் வலை விரித்து மீன்பிடிப்பதால் துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், இதனால், தங்கள் தொழில் பாதிக்கப்படுவதாக கூறி மீனவர்களை இந்த குறிப்பிட்ட இடத்திற்குள் மீன் பிடிக்க தடை விதிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறியிருக்கிறது.

எந்த பகுதியில் மீன் பிடிக்க கூடாது என்பதை வரைபடத்துடன் அனுப்பி இருக்கும் அந்நிறுவனம், மீன் பிடிப்பதற்கு இந்த இடத்திற்குள் நுழைய அனுமதி அளிக்க கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனால், இந்த பகுதி மீனவர்கள், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில், அதானி குழுமத்தின் இந்த கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு கடல்சார் வாரியத்திற்கு தேசிய நீர் வழித்தட அலுவலகம் பரிந்துரைத்திருக்கிறது.