சண்டிகர்: அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் அங்கன்வாடி மையங்களை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தாலும் சில மாநிலங்களில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த இரவு நேரப் பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களை மூட மாநில சமூகபாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் அருணா செளத்ரி உத்தரவிட்டார்.

இது குறித்து அவர் கூறியதாவது: குழந்தைகளுக்கான ரேஷன் மற்றும் பிற பொருட்கள் அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மூலம் வீடு தேடி தொடர்ந்து விநியோகிக்கப்படும். மாஸ்க் அணுவது, கைகளை கழுவுதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் போன்ற சுகாதார நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.