சென்னை,

நீலகிரி கோர்ட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழக நடிகர்கள் 8 பேரும் சென்னை ஐகோர்ட்டில், தடை கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

சென்னை ஐகோர்ட்டு  நீலகிரி கோட்டின் பிடிவாரண்டுக்கு தடை விதித்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு தமிழ் நாளிதழ் ஒன்றில் நடிகைகள் குறித்த  செய்தி வெளியானது. பல நட்சத்திர நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக, அப்போதைய கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி கூறியதாக,  செய்தி பிரசுரமாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

திரையுலகினர் எதிர்ப்பு காரணமாக  அந்தச் செய்திக்கு நாளிதழ் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்தச் செய்தி வெளியானதைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் கண்டன கூட்டம் 7.10.2009 அன்று நடைபெற்றது.

இதில், பல்வேறு நடிகர்கள் உரையாற்றினர். அந்தக் கூட்டத்தின்போது பத்திரிகையாளர்கள் மீது தரக்குறைவான விமர்சனங்களை பிரபல  நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சேரன், விவேக், சத்யராஜ், அருண் விஜய், விஜயகுமார், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் முன்வைத்ததாகக் கூறி ரொஷாரியோ என்பவர் நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த 15ந்தேதி நடைபெற்றது. அப்போது நடிகர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதன் காரணமாக அவர்களுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதையடுத்து நடிகர்கள் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் நீலகிரி நீதிமன்றத்தில்பி டிவாரண்ட்டை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீலகிரி  நீதிமன்றத்தின் பிடிவாரண்டு உத்தரவுக்கு  இடைக்கால தடை விதித்தது.