சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நடிகர் சரத்குமார், இன்று நடிகர் கமல்ஹாசனை திடீரென சந்தித்து பேசினார். இது கூட்டணிக்கான அச்சாரம் என கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து நடிகர் சரத்குமாரின் சமத்து மக்கள் கட்சி விலகியுள்ளது. அதுபோல திமுக கூட்டணியில் இருந்து பாரிவேந்தரின் ஐஜேகே கட்சியும் விலகி உள்ளது. இந்த கட்சிகள் நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம்  கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக மட்டுமல்லாது மேலும் 2 கூட்டணிகள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அமமுக தலைமையில்  தனிக்கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வரும் நிலையில்,  கமல்ஹாசனின் கட்சி தலைமையில் மற்றொரு கூட்டணி அமைக்கப்பட்டு தேர்தலை சந்திக்கும் சூழலும் உருவாகி வருகிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், நடிகர் சரத்குமார் இன்று கமல்ஹாசனை சந்தித்து பேசினார். அப்போது, கமல் தலைமையிலான கூட்டணியில் சரத்குமார் கட்சி இடம்பெற விருப்பம் தெரிவிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து கட்சியினருடன் கலந்துபேசி அறிவிப்பதாகவும் கமல்ஹசான் கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த செய்தி உண்மையானால், தமிழக தேர்தல் களத்தில் 4முனை கூட்டணி ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடும்.