அரியலூர்:
செந்துறை அருகே காணாமல் போன சமூக ஆர்வலர் கொன்று புதைக்கப்பட்டதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.
அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா சோழன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 70). சமூக ஆர்வலரான இவர், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பலரது ஊழல்கள் குறித்து புகார்கள் தெரிவித்துவந்தார்.
இந்த நிலையில் கடந்த 2008–ஆம் ஆண்டு அந்த பகுதியில் பணியாற்றிய கிராம நிர்வாக அதிகாரி மீது இலஞ்ச ஒழிப்புத்துறையில் விஸ்வநாதன் புகார் அளித்தார். அதன் பேரில் அந்த கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 19–9–2016 அன்று முதல் விஸ்வாதனை காணவில்லை. இதுகுறித்து அவரது மருமகள் அமுதா குவாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே விஸ்வநாதன் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொனர்வு மனுவை தாக்கல் செய்தனர். அதன் பேரில் சோழன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களிடம் முதல் கட்டமாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே சில நாள்களுக்கு முன்பு கூலிப்படையைச் சேர்ந்த சிலரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள், விஸ்வநாதனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
கடலூர் மாவட்ட எல்லைக்குப்பட்ட வெள்ளாறு பகுதயில் விஸ்வநாதனை புதைத்ததையும் தெரிவித்தனர்.
கூலிப்படையைச் சேர்ந்த அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நயினார்குடிகாடு கிராமத்தை சேர்ந்த பாலமுருகன், சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அழகர் ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கூலிப்படையினர் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.