சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான பேருந்து சேவைகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,  அக்டோபர் 1ந்தேதி முதல் ஏசி பேருந்துங்கள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பல மாதங்களாக நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள், தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் குறைந்த அளவிலான நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பின்னர் படிப்படியாக கூட்டப்பட்டது.

இதற்கிடையில் கொரோனா 2வது அலையின் வீரியம் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், கடந்த மே மாதம் பேருந்து சேவை உள்பட அனைத்து சேவைகளும் மீண்டும் முடங்கின. பின்னர் தொற்று பரவல் குறைந்ததால், மே மாதத்தில் மீண்டும் பேருந்துகள் சேவை தொடங்கியது. பின்னர் மே மாதம்  22ந்தேதி முதல் மீண்டும் பேருந்துகள்  வெளியூர் பயணிகளின் நலன் கருதி அவ்வப்போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. தொடர்ந்து சென்னை உள்பட  4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன.  தொடர்ந்து ஜூன் 28ந்தேதி முதல்,  27 மாவட்டங்களில் கொரோனா நெறிமுறைகளுடன் பேருந்துகள் இயக்க உத்தரவிடப்பட்டது.

தொடர்ந்து ஜூலை 1ந்தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டன. முதற்கட்டமாக  100 விரைவு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இடையில் தொற்று பரவல் அதிகமிருந்த கோவை உள்பட  11 மாவட்டங்களுக்கு விரைவு பேருந்து இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அக்டோபர் 1ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.  அக்டோபர் 1ந்தேதி  முதல் முதற்கட்டமாக  702 அரசு ஏ.சி. பேருந்துகள் இயக்கப்பட  இருப்பதாகவும், இந்த பேருந்துகள்  மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே  இயக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.