சென்னை:
சென்னையில் தற்போது வரை சுமார் 5,70,000 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளதாக வும், இன்னும் 15 நாளில் 10 சதவிகிதம் பேருக்கு சோதனை முடிக்கப்படும் என்று மாநகராட்சிஆணையாளர்  பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில், இன்று கொரோனா பரிசோதனை தொடர்பாக, சென்னையில் உள்ள தனியார் பரிசோதனை மைய பிரதிநிதிகளுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்பட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், சென்னையில் 4, 5 நாட்களுக்கு முன்னரே 5 லட்சம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டுள்ளோம்.  ஜூன் 19-ம் தேதி நாள் ஒன்றுக்கு 4,500 பரிசோதனைகள்  நடத்தப்பட்டது, தற்போது கிட்டத்தட்ட நாள் ஒன்றுக்கு  14 ஆயிரம் பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில்  முதல் 1 லட்சம் பரிசோதனைகள் 2 மாத காலத்திலும், இரண்டாவது 1 லட்சம் பரிசோதனைகள்  25 நாட்களிலும், மூன்றாவது 1லட்சம் பரிசோதனைகள் 16 நாட்களிலும், நான்காவது 1லட்சம்  பரிசோதனைகள் 10 நாட்களிலும், ஐந்தாவது 1 லட்சம் பரிசோதனைகள்  9 நாட்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வரை சுமார் 5,70,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்னும் 15 நாட்களில் சென்னையில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 10% பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து முடிக்கப்படும்.
அதுபோல, இன்னும்  3 மாதங்களுக்காவது சென்னையில் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றினால், கொரோனா பரவலை தடுக்க முடியும்.
வணிக நிறுவனங்களில் அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களும் கடைகளுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
கொரோனாவில் இருந்து தடகக  பொதுமக்களுக்கு சாதாரண (Double layer) காட்டன் முகக்கவசமே போதுமானது . N95 முகக்கவசம் அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது செய்தியாளர்கள் , ரஜினிகாந்த் லம்போகினி காரில் சுற்றியது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்தவர், ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்று  செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான அனுமதி பெற்று சென்றாரா என்பது குறித்தும் சென்னைக்கு மீண்டும் முறையான பாஸ் பெற்ற வந்தாரா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.