பிரபாஸ், கிருத்தி சனோன், சைஃப் அலி கான் நடிப்பில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போனது.

450 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

ராமாயணத்தை தழுவி முழுக்க முழுக்க கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் பிரபாஸ் ராமனாகவும் கிருத்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர்.

அக்டோபர் 2 ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் அயோத்தியில் வெளியிடப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த டீஸர் படக்குழுவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

இதில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் ஒரு பெரிய பட்ஜெட் படத்திற்கு இணையாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

ஆரம்பத்தில் இந்த விமர்சனங்களை பெரிதும் கண்டுகொள்ளாத தயாரிப்பு நிறுவனம் ஒரு சில காட்சிகளை மட்டும் சிறு சிறு மாற்றங்களுடன் ஏற்கனவே அறிவித்தபடி ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டது.

99 மில்லியன் வியூஸ்-களை கடந்த போதும் இதன் டீஸருக்கு எதிரான குரல்கள் மட்டும் ஓயவில்லை என்பதால் தற்போது மேலும் 100 கோடி செலவில் கிராஃபிக்ஸ் காட்சிகளை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது.

இதனால் ஆதிபுருஷ் படம் 2023 ஜூன் மாதம் 16 ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.