அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது இரண்டு கருப்பையிலும் இரண்டு கருக்களை சுமந்து வருகிறார்.

டிசம்பர் மாத இறுதியில் குழந்தை பிறக்க உள்ள நிலையில் இதுகுறித்து மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கெல்சி ஹாட்சர் – காலேப்

கெல்சி ஹாட்சர் என்ற பெண் கருவுற்றதை அடுத்து மருத்துவமனை சென்றுள்ளார் பரிசோதனையில் அவருக்கு இரண்டு கருப்பைகள் இருப்பதும் அவை இரண்டிலும் தனித்தனி கரு உருவாகி இருப்பதும் தெரியவந்தது.

பிறப்பில் இருந்தே இரண்டு கருப்பைகள் கொண்ட கெல்சி ஹாட்சர் இதுபோல் இரண்டிலும் கருவுற்றிருப்பதை அறிந்து மருத்துவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

இரண்டு கருப்பைகள் இருப்பது அரிதான ஒன்று என்று கூறும் மருத்துவர்கள் இரண்டிலும் கருத்தரிப்பது என்பது அரிதிலும் அரிதான ஒன்று என்று கூறுகிறார்கள்.

பொதுவாக இரண்டு கருப்பை உள்ளவர்களுக்கு பிறப்புறுப்புடன் ஒரேயொரு இணைப்பு மட்டுமே இருக்கும் நிலையில் கெல்சி ஹாட்சருக்கு இரண்டு இணைப்புகள் இருப்பதாலேயே இதுபோல் இரண்டு கருக்களை சுமந்துவருவதாகக் கூறினர்.

மேலும், இரண்டிலும் பிரசவ வலி என்பது ஒரே நேரத்திலோ அல்லது வேறு வேறு நேரத்திலோ வரக்கூடும் என்றும், சில நிமிட இடைவெளியோ அல்லது வாரக்கணக்கில் கூட இடைவெளி ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தவிர, இது சிக்கலான பிரசவமாக இருக்கும் என்றும் இரண்டு பிரசவ வலிகளையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் கெல்சி ஹாட்சர் தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அதற்கான மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பர்மிங்காம் நகரைச் சேர்ந்த கெல்சி ஹாட்சர் – காலேப் தம்பதிக்கு ஏற்கனவே 7 வயது, 4 வயது மற்றும் 2 வயதில் மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது நான்காவது முறையாக இரட்டை கருவை சுமந்து வருவது குறிப்பிடத்தக்கது.