டில்லி

நாட்டில் நடந்த மதக் கலவரங்களில் அதிகமாக சுமார் 60 கலவரங்கள் உத்திரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

சமீபத்தில் மதக்கலவரங்கள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை ஒன்று பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.  அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 296 மத வன்முறை நடந்துள்ளது.  அதில் 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  கடந்த 2 வருடங்களில் 2016ல் 703 கலவரத்தில் 86 பேரும், 2015ல் 751 கலவரத்தில் 97 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த வருடம் நடந்த மத வன்முறை சம்பவங்கள் அதிகமாக 60 தடவை உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.   கர்னாடகா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், வங்காளம் ஆகியவை அடுத்த இடங்களில் உள்ளன. இந்த 60 வன்முறை சம்பவங்களில் 16 பேர் மரணமடைந்தும், 150க்கு மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.  சென்ற வருடம் உ பி யில் 162 கலவரங்களில் 29 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் இந்த வருடம் மே மாதம் வரை 26 வன்முறை சம்பவங்களில் 3 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  சென்ற வருடம், முழுவதும் 32 வன்முறை சம்பவங்களில் 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இந்த மத வன்முறைகளுக்கும் அது குறித்த விசாரணைகள், மற்றும் கொடுக்கப்பட்ட தண்டனைகளுக்கு அந்தந்த மாநில அரசுகளே பொறுப்பாகும்.

ஆனால் மத்திய அரசுக்கு இது பற்றிய எந்த தகவலும் மாநில அரசுகளால் அளிக்கப்படவில்லை. மத்திய அரசு வன்முறைகளை தவிர்க்க பல வழிமுறைகள், மற்றும் மத வன்முறை நடக்கும் இடங்களை கையாளும் விதிமுறைகள் பற்றி ஏற்கனவே அனைத்து மாநில அரசுகளுக்கும் தெளிவாக விளக்கியுள்ளது.   ஆனால் அவற்றை மாநில அரசுகள் பின்பற்றியதாக தெரியவில்லை

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.