நேற்றைய சிவாஜி நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன்

நாம் அறிந்த நடிகர் திலகம்.. கடலில் ஒரு துளி..

யாராவது ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு பேசினாலோ, முகபாவத்தை மாற்றினாலோ, உடனே சகஜமாக வருகிற வார்த்தைகள்..
’’ஆமா இவரு பெரிய, பாசமலர் சிவாஜி..’’

தலைமுறைகளை தாண்டி கடந்து இன்றும் வீச்சு பெற்றிருக்கின்ற அளவுக்கு அந்த படத்தில் சிவாஜி அப்படி அசத்தினார்.

அதனால்தான் கே.பாலச்சந்தர் முதல் மணிரத்னம் வரையிலான ஜாம்பவான் டைரக்டர்களில் யாரைக்கேட்டாலும் அவர்களது டாப்டென் லிஸ்ட்டில் சிவாஜியின் பாசமலர் தவறாமல் இருக்கும்..

பாசமலர் படத்தை எடுத்தது நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பரும் நடிகர் சந்தான பாரதியின் தந்தையுமான எம்ஆர் சந்தானம், இவரும் நடிகரே.

பிறவிக்கலைஞன் என்பார்களே, அது அரிதினும் அரிதாகவே அமையும் சிவாஜி போன்றவர்களுக்கு..

அமெரிக்காவில் நடிப்பாசையால் அலைமோதிய மார்லன் பிராண்டோவுக்கு 1947ல் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப்போட்டது எ ஸ்ட்ரீட்கார் நேம்டு டிஸையர் என்ற நாடகம்..

ுன்னணி நடிகர்கள் இருவர் கடைசிநேரத்தில் நடிக்க மறுத்ததால், 24 வயது பிராண்டோவுக்கு வாய்ப்பு கிடைத்து பெரிதும் பேசப்பட்டு பின்னாளில் அவரின் திரையுலக பயணத்திற்கே அது வெற்றிப்பாதை
யையும் அமைத்தது…

நடிகர் திலகத்தின் கதையும் இதே ரகம்தான்.,1946ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா எழுதிய நாடகத்தில் கடைசி நேரத்தில் நடிப்பதை எம்ஜிஆர் தவிர்த்துவிட்டார்.

அரங்கேற்றதிற்கு மூன்றே நாட்கள்தான் இடையில் இருந்தன. பதறிப்போன அண்ணாவின் கண்ணுக்கு அப்போது ஏதோ ஒரு ஒளி தென்பட்டது.. அது, ஒத்தை நாடியாய் வசன ஒத்திகைக்கு வந்த கணேசன் என்ற 18 வயது இளைஞன்.

90 பக்க வசனத்தை அவரிடம் கொடுத்து ‘’நீதான் மாவீரன் சிவாஜியாய் நடிக்கிறாய்’’ என்று சொன்னார். கணேசன் தயங்கவேயில்லை.. வசனங்களை மனதில் ஏற்ற ஆரம்பித்தார். இன்னாரு பக்கம் 29 வயது எம்ஜி ஆருக்காக தைக்கப்பட்டிருந்த ஆடைகள், 18 வயசு கணேசனுக்காக சுருக்கி மாற்றி தைக்கப்பட்டுவந்தன.

நாடகம் அரங்கேறியது.. மராட்டிய வீரனாக கர்ஜித்த கணேசன், நாடகத்தை பார்க்கவந்த தந்தை பெரியாரின் கண்ணுக்கு அந்த மராட்டியே சிவாஜியாகவே தெரிந் தார்..பெரியாரின் வாயால் கணேசன் என்பவர் அன்றை ய தினமே சிவாஜி கணேசனாக மாறிப்போனார்.

ஆனாலும் எதிர்மறை விதி அவரை துரத்திக்கொண்டே இருந்தது.. 1948ல் வெளியான சந்திரலேகா, பிரமாண் டமாக வளர்ந்துவந்த நேரம்.. அதில் ஒரு துண்டு ரோலாவது கிடைக்குமா என்று ஜெமினி பிக்சர்ஸ் வாசன் அலுவலகத்திற்கு எத்தனையோ முறை படையெடுத்தார். ‘’உனக்கெல்லாம் சினிமா செட்டாகாது தம்பி..பிழைப்புக்கு வேறு தொழிலை பார்த்துக்கொள் தம்பி ’’ என்று கடைசியில் எஸ்எஸ். வாசனால் நிராகரிக்கப்பட்டார் சிவாஜி..

இந்திய சினிமாவில் பிரமாண்டத்தின் பிதாமகன் என்று போற்றப்பட்ட இதே வாசன்தான், பின்னாளில் சிவாஜியைநாடி இரும்புத்திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற காவியங்களை எடுத்து வெற்றிகளை தந்தார் என்பது தனிக்கதை.

திரையுலகில் கரை கண்டு நுரைதள்ளிய ஜாம்பவான் வாசனுக்கு தெரியாத சிவாஜியின் சிறப்பம்சம், சாதா ரண படத்தயாரிப்பாளர் வேலூர் நேஷனல் தியேட்டர் உரிமையாளர் பீ.ஏ,பெருமாளுக்கு தெரிந்ததுதான் விநோத்திலும் விநோதம்.

பீ.ஏ.பெருமாள் மூலம் இன்னொரு கில்லாடிக்கும் தெரிந்தது. அது,வேறுயாருமல்ல, நடிகை அஞ்சலிதேவிதான்.

அப்போமு அஞ்சலி தேவி தெலுங்கில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்தார் படங்களையும் தயாரிக்க ஆரம்பித்தார்.

உண்மையில் சிவாஜி கதாநாயகனாய் சம்பளத்துடன் புக்கான முதல் படம், அஞ்சலிதேவி தயாரித்த பரதேசி படம்தான்..

1951ல் நிரபராதி என்றொரு படம்… முக்காமாலா கிருஷ்ணமூர்த்தி ஹீராவாக நடித்து தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் வெளியான படம்.. நடிகர் முக்காமாலா எம்ஜிஆரின் நம் நாடு படத்தில் கிளைமாக்சில் போலீஸ் அதிகாரியாக வருவார்.

நிரபராதி படத்தின் தமிழ் வெர்ஷனில் முக்காமாலா வால் தமிழை சரியாக உச்சரிக்க முடியவில்லை.. இதற்காக டப்பிங் பேசும்வாய்ப்பு சிவாஜிக்கு கிடைத் தது. சம்பளம் 500 ரூபாய்..அப்போது சிவாஜியின் வசன ஆற்றலை பார்த்துதான் நிரபராதி படத்தின் நாயகியான அஞ்சலிதேவி தன்னுடைய சொந்த படத்திற்கு சிவாஜியை கதாநாயகனாக புக் செய்தார்.

ஆனால் அஞ்சலிதேவியின் பரதேசி படம் தயாராவ தற்குள் பி.ஏ-பெருமாளும் ஏவிஎம்மும் கூட்டாக தயாரித்த பராசக்தி வேகமாக வளர்ந்து 1952 தீபாவளி தினத்தில் வெளியாகி நாத்திகம் பேசி சக்கை போடுபோட்டு வெள்ளி விழாவே கண்டுவிட்டது..

ஆனால் பராசக்தியின் இமாலய வெற்றிக்களிப்பில் சிவாஜி மிதக்கவேயில்லை.. இப்படிப்பட்ட ரோல்கள் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கவுமில்லை…

எந்த பாத்திரம் என்றாலும் தயார் என்று ஓப்பனாய் சொன்ன சிவாஜி, பெரும்பாலும் இமேஜ் பார்த்த தேயில்லை.. பராசக்தி ஹீரோவாய் மிரட்டிய அவர், அடுத்த சில படங்களில் வில்லத்தனம்கொண்ட கதாநாயகனாய் நடித்துத்தள்ள முடிந்தது..

திரும்பிப்பார் படத்தில் செக்ஸ் ஒன்றே வாழ்க்கையின் பரமானந்தம் என நினைத்து, யாராக இருந்தாலும் பெண்டாள துடிக்கிற மோசமான பாத்திரம்.. பராசக்தி குணசேகரனுக்கும் அடுத்த ஆண்டு வந்த திரும்பிப்பார் பரமானந்தத்திற்கும் இடையேதான் நடிப்பில் எவ்வளவு வேறுபாடு..?

பாடல்களே இல்லாத முதல் தமிழ்படமான அந்த நாள் (1954) படத்தில் அப்படியொரு கொடூரமான தேசத் துரோகி வேடம்..ஜமாய்த்தார் சிவாஜி. முதல் பிரமிலேயே கதாநாயகன் செத்துக்கிடப்பான். இப்படி நடிக்க எவ்வளவு தைரியம் வேண்டும்?

முன்னணி ஹீரோவான எம்ஜிஆரின் கூண்டுக்கிளி படத்தில் நண்பனின் மனைவியையே சூறையாடத் துடிக்கும் காமவெறிபிடித்த மிருகம் வேடம்.. படம் முழுக்க மிரட்டி எடுத்தார் சிவாஜி..

அதேவேளையில்,சிவாஜிக்கு பராசக்தியில் வசனத் தால் கைகொடுத்த கருணாநிதி, தொடர்ந்து தனது வசனங்களால் தமிழ் சிம்மாசனங்களை போட்டுத் தந்தபடியே இருந்தார்.. பணம், திரும்பிப்பார், மனோகரா, ராஜராணி, ரங்கோன் ராதா, புதையல், இருவர் உள்ளம் என சிவாஜி-கருணாநிதி காம்பினேஷன் கலக்க ஆரம்பித்தது..

இடையில் பீம்சிங், பி.ஆர்.பந்துலு. ஏபி, நாகராஜன் என்ற மும்மூர்த்திகள் கிடைக்க, சிவாஜியின் திரைப்பயணம் ஜெட் வேகமாகவே மாறியது..

டைரக்டர் பீம்சிங் பதிபக்தி, பாவமன்னிப்பு பாசமலர், பாலும் பழமும், படித்தால் மட்டும்போதுமா, பார்த்தால் பசி தீரும் என ‘’ப’’ வரிசையில் கண்ணதாசன், மெல்லிசை மன்னர்கள் கூட்டணியோடு குடும்ப படங்களாய் எடுத்து வெற்றியாய் குவித்தார்.

பி.ஆர்.பந்துலுவோ, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் என சிவாஜியை காவியங்களின் நாயகனாக முத்திரை பதிக்கவைத்தார்.

ஆரம்பத்தில் சிவாஜியை வைத்து வடிவுக்கு வளைகாப்பு, குலமகள் ராதை, நவராத்திரி என குடும்ப படங்களை கொடுத்த ஏ.பி. நாகராஜன் திடீரென என்ன நினைத்தாரோ, புராண படங்களாய் எடுத்து சிவாஜியை விதவிதமான கடவுள் பாத்திரங்களில் காட்ட ஆரம்பித்தார். திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், கந்தன் கருணை, திருமால் பெருமை என நீண்ட பட்டியலில் திடீர் திருப்பமாக தில்லானா மோகனாம்பாள் வந்து இடம் பிடித்தார்..

மோகனா, வைத்தி, வடிவாம்பாள், ஜில்ஜில் ரமாமணி, தவில் வித்வான் ஆகியரெல்லாம் சுழன்று சுழன்று அடித்தும் தன்னுடைய பாத்திரமான நாயன வித்வான் சண்முக சுந்தரத்தை யாரும் நெருங்க முடியாமல் நடிப்பில் சிவாஜி காட்டிய சாகசம், விவரிக்க வார்த்தைகளே போதாது..

தமிழகத்தின் எந்த நாதஸ்வர ஜாம்பவானும் சிவாஜி யின் நடிப்பை பற்றி குறைசொல்லவேயில்லை. காரணம், அந்த படத்தில் சண்முக சுந்தரமாகவே வாழ்ந்திருப்பார் சிவாஜி..

புதிய பறவை கோபால், வசந்தமாளிகை ஆனந்த், உயர்ந்த மனிதன் ராஜூ போன்ற பாத்திரங்களின் முன்னால் நிஜமான ஜமீன்தார்கள், கோடீஸ்வரன் களின் ஸ்டைல், பரம்பரை பணக்கார தோரணைகூட எடுபடுமா என்பது சந்தேகமே….

வக்கீல் உலகமே வியப்பாக பார்த்த கௌரவம் பாரீஸ்டர் ரஜினிகாந்த், போலீஸ் அதிகாரிகளையே மிடுக்காக இருக்கத்தூண்டிய தங்கப்பதக்கம் எஸ்பி சௌத்ரி என மேல் தட்டுவர்க்க ஆளுமைகளையும் சிவாஜியின் நடிப்புலகம் அசைத்துப்பார்க்க தவறவேயில்லை.

உணர்ச்சிய மயக்குவியல் காட்சிகள் கொண்ட படங்களில் அவர் காட்டிய நடிப்பாற்றலை திரைப்பட கல்லூரிகளில்கூட அவ்வளவு சுலபத்தில் விவரித்துவிட முடியாது.

நான் பெற்ற செல்வம், பாகப்பிரிவினை, ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, சாந்தி, நீலவானம், இரு மலர்கள், வியட்நாம் வீடு, பாபு, கவரிமான் என அந்த பட்டியல் மிகப்பெரியது.

நாட்டியப்பேரொளி பத்மினியும் புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவும் சிவாஜியின் திரைப்பயணத்தை அலங்கரிக்கக் கிடைத்த பொக்கிஷங்கள் என்று இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்..

நடிப்பு மட்டுமின்றி படத்தயாரிப்பிலும் கலக்கியவர் சிவாஜி. இந்த விஷயத்தில் அவர் ஒரு வித்தியாசமான மேஜிக் மேன் என்றே சொல்லலாம்.. 1964ல்தனது முதல் வண்ணப்படமான புதிய பறவையை எடுத்த சிவாஜி, 1970களின் இறுதியில் ரஜினி- கமல் சகாப்தம் ஆரம்பித்த கட்டத்தில் எதைப்பற்றியும் யோசிக்காமல் எடுத்த படம், திரிசூலம்.

இதில் மூன்று வேடங்களில் நடித்து 1979ல் திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ்புல் போர்டை பல வாரங்க ளுக்கு தொங்கவிடவைத்து, மூட்டை மூட்டையாய் வசூலை கட்டிப்போகும் வித்தை அவருக்கு தெரிந்திருந்தது..,

சிவாஜி உட்கார்ந்தாலும் நடிப்பு, நின்றாலும் நடிப்பு.. அது,அவர் ரத்தத்தில் ஊறிப்போன விஷயம்.. இதை புரிந்துகொண்டுதான் பாரதிராஜா, முதல் மரியாதை என்ற காவியத்தை கொடுத்தார், கமலஹாசனும் தேவர் மகன் என்ற படத்தை சிவாஜியை வைத்து காவியமாக்கிக்கொண்டார்.

பாமரன் முதல் படைப்பாளிகள்வரை அனைவரையும் நடிப்பாற்றலால் கட்டிப்போட்டதால்தான் சிவாஜியின் பெருமை நாடுகள் கடந்து இன்றும் பேசப்படுகிறது.

1962 ஆம் ஆண்டு கலாச்சார தூதுவராக சிவாஜி அமெரிக்காவுக்கு சென்றபோது அவரின் நடிப்புத் திறமையை கேள்விப்பட்டிருந்த ஹாலிவுட் முன்னனி நடிகர்களான (பென்ஹர், டென் கமாண்மெண்ட்ஸ் ஹீரோ) கார்ல்ட்ட்ன் ஹெஸ்டன், ஜேம்ஸ் கார்னர், ஜேக் லெம்மான் போன்றோரெல்லாம் அவரைக்காண தேடி ஓடிவந்தார்கள். சிவாஜியிடம் மனம்விட்டுபேசி குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டு போனார்கள்.

இதற்கு முன்பு இன்னொரு வெளிநாட்டு சமாச்சாரம்.. 1960… எகிப்தின் கெய்ரோ ஆப்ரோ-ஆசியா படவிழா வில் வென்ற முதல் இந்திய திரைப்படம் வீரபாண்டிய கட்டபொம்மன்தான். சிறந்த படம், சிறந்த நடிப்பு, சிறந்த இசை ஆகிய மூன்று பிரிவுகளில் விருதை அள்ளியது.

விருது வாங்க சிவாஜி எகிப்து சென்றபோது அந்நாட் டின் அதிபர் நாசர் வெளிநாடு போயிருந்தார். இதனால் நாசர்-சிவாஜி சந்திப்பு நடக்காமல் போனது. பின்னர் இந்தியா வந்தபோது நாசர் இதுபற்றி பிரதமர் நேரு விடம் நினைவூட்ட தனிப்பட்ட ரீதியில் நாசருக்கு விருந்துவைக்க சிவாஜிக்கு பிரதமர் நேரு அனுமதி தந்தார் என்பது இன்னொரு வரலாறு.

உலக சினிமாவில் நடிப்புமேதை என போற்றப்பட்ட மார்லன் பிராண்டோவே, சிவாஜியை நேரில் சந்தித்து பேசிய பின்னர், சொன்ன வார்தைகள் இவை..
‘’சிவாஜியால் என் அளவுக்கு சர்வசாதாரணமாக நடித்துவிடமுடியும்.. ஆனால் அவர் அளவுக்கு என்னால் நடிக்கவேமுடியாது’’

எல்லாவற்றையும்விட சுவாரஸ்யமான விஷயம் தனது பிறந்த நாள் எப்போது என்று சிவாஜி தெரிந்து கொண்டதுகூட வித்தியாசமான வரலாறுதான்.

சிவாஜியின் தந்தையான விழுப்புரம் சின்னய்யா சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக சிறைபிடிக்கப்பட்டார்.. அன்றைய தினம்தான் ராஜாமணிக்கு சிவாஜி பிறந்தார். பின்னாளில் இந்த சிறைபிடிப்பு தினத்தை கண்டுபிடித்த பிறகே அக்டோபர் ஒன்றாம் தேதிதான் சிவாஜியின் பிறந்ததினம் என தீர்மானிக்கப்பட்டது..