ஐதராபாத்: இந்த 2019 தேர்தலில், மோடி அலை என்று எதுவுமில்லை எனவும், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத புதிய அணிதான் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியமைக்கும் எனவும் தடாலடி மன்னர் அசாதுதீன் ஓவைஸி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது; இந்தத் தேர்தல் ஒரு வெளிப்படையான தேர்தல். இத்தேர்தலில், கடந்த 2014ம் ஆண்டைப்போல, மோடி அலை என்றெல்லாம் எதுவுமில்லை. ஒவ்வொரு நாடாளுமன்ற இடத்திற்கும் கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தலின் முடிவில், பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் அல்லாத அணிதான் ஆட்சியமைக்கும். இந்தியாவின் ஒரு பிராந்திய தலைவர்தான் பிரதமராக பொறுப்பேற்பார்.

இந்த நாட்டின் முக்கியப் பண்பான வேற்றுமையில் ஒற்றுமை காக்கப்பட வேண்டும். இன்றையப் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைவிட, பல பிராந்தியத் தலைவர்கள் திறமையானவர்களாய் இருக்கின்றனர்.

தனது தோல்விகளை மறைக்க, பாரதீய ஜனதா ஆடும் தேசப் பாதுகாப்பு ஆட்டம் செல்லுபடியாகாது. மக்கள் விழிப்புடன் உள்ளனர்” என்றார்.

ஐதராபாத் நாடாளுமன்ற தொகுதியில் 3 முறை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இத்தேர்தலிலும் அதே தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.

– மதுரை மாயாண்டி