புதுமை பெண் திட்டம் – நிகழ்த்தும் அற்புதம்
கட்டுரையாளர்: தாமரைச்செல்வன், Everest Minds
புதுமை பெண் திட்டம் கடந்து வந்த பாதை:
தமிழ் நாட்டின் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் திருமண உதவிக்காக திமுக ஆட்சியின் போது, கொண்டு வரப்பட்டது திருமண நிதி உதவி திட்டம்.அப்போது முதல்வராக இருந்த கலைஞர் , கடந்த 1989-ல் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தை கொண்டு வந்தார்.
அரசு பள்ளிகளில் கற்கும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டமானது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டது. புதுமைப்பெண் என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாதம் தோறும் ரூ.1,000 உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்பட்டது.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வித் திட்டத்தின்கீழ், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியிலேயே படித்து தற்போது கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கும் ‘புதுமைப் பெண் திட்டத்தை’ முதல்வர் ஸ்டாலின் 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
முதலில் இந்த திட்டம் பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதல் மற்றும் ஏழை பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு நிதி உதவி வழங்குதல் என்ற நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போதைய சூழலுக்கு ஏற்ப பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
புதுமைப் பெண் திட்டம் 2.0:
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் உள்ள இந்து கல்லூரியில், புதுமைப் பெண் 2.0 திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.இந்தப் புதுமைப் பெண் திட்டம் 2.0-வின் மூலம் 1,04,347 மாணவிகள் பயன்பெறுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் .
முதற்கட்டமாக இத்திட்டத்தால் 1,16,342 மாணவிகள் பயனடைந்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.முதல் கட்டமாக இந்த திட்டத்துக்காக கடந்த 5 மாதங்களில் 69.44 கோடி ரூபாய் அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மூலம் இடைநிற்றலில் இருந்து 12,000 மாணவிகள் மீண்டும் உயர்கல்வி படிப்பை தொடர்ந்துள்ளனர். இதுவே இந்த திட்டத்தின் வெற்றி என்று தெரிவித்தார்
ரூபே பிளாட்டினம் கார்டு அறிமுகம்:
பேங்க் ஆஃப் பரோடா வெளியிடும் இந்த `ரூபே பிளாட்டினம்’ அட்டையை வைத்திருப்பவர்களுக்கு, தனிநபர் விபத்து காப்பீடாக ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரையிலான காப்பீடு வழங்கப்படும். இந்த ‘ரூபே பிளாட்டினம்’ அட்டைக்கு முதல் ஆண்டில் சேர்க்கைக் கட்டணம் மற்றும் வருடந்திர கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று பேங்க் ஆஃப் பரோடா அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ‘ரூபே பிளாட்டினம்’ அட்டை கல்லூரி மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
புதுமைப் பெண் திட்டத்தின் பலன்:
மாநிலத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் 2021-22-ம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 8 ஆக இருந்த நிலையில், 2022-23-ம் கல்வியாண்டில் இதன் எண்ணிக்கை 91 ஆயிரத்து 485 ஆக உயர்ந்து இருப்பதாக உயர்கல்வித் துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் 29 சதவீதம் மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது.
இதில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 4 ஆயிரத்து 806 பேரும், என்ஜினீயரிங் கல்லூரிகளில் 12 ஆயிரத்து 711 பேரும், மீதமுள்ளவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் உள்பட உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வ.எண் | கல்வியாண்டு | உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை |
1 | 2021-2022 | 71,008 |
2 | 2022-2023 | 91, 485 |
இந்த திட்டம் மறைமுகமாக அரசு பள்ளிகளில் பெண்கள் பயில்வதை ஊக்குவிக்கும். அனைத்து தரப்பு பெண்களும் அரசு பள்ளியில் சேர்ந்து பயில்வதால் பள்ளியின் தரமும் மென்மேலும் உயரும்.
இந்த திட்டம் பெண்களை உயர்கல்வி பயில்வதற்கான ஊக்கமாகவும், நம் சமூகத்தில் சரிபாதியாக உள்ள சமூகம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வளர்ச்சி பெறுவதற்கான ஊக்கத்தை கொடுக்கும். இன்று நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களில் 40 % மேல் தமிழ்நாட்டு பெண்கள் என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டம், மேலும் பெண்களின் கல்வி ஆற்றலையும் அவர்களின் வேலைவாய்ப்பையும் அதிகரிக்க உரமிடும். தமிழ் நாட்டின் 1 டிரில்லியன் பொருளாதாரத்திற்கான பெரும் பயணத்தில் இந்த திட்டம் அளப்பரிய பங்கு ஆற்றும் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம். மேலும், சர்வீஸ் துறையில் தமிழ் நாட்டின் ஆதிக்கத்தை மேலும் உறுதி செய்யும். வளமான மனிதவளத்தை மூலதனமாக கொண்டு தமிழகம் மேலும் பல பன்னாட்டு தொழில் நிறுவனங்களையும், முதலீடுகளையும் ஈர்க்கும். புதுமை பெண் திட்டம் புதிய பொருளாதார தமிழகம் பெரும் வளர்ச்சிக்கான அடிகோலும் திட்டமாக மாறும் என்பதை பொருளாதாரம் அறிந்தோர் அறிவர்.