சென்னை: தமிழ்நாடு அரசியலில்  குதிரை பேரத்துக்கு வித்திட்ட,  பிரிந்த அதிமுக அணிகள்  தற்போது இணைந்ததாக அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வந்த அதிமுகவில் இபிஎஸ்  – வேலுமணி சிவி சண்முகம்  விவகாரம் இன்று சுமூகமான நிலையை எட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அதிமுக  ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றிருக்கிறது.

அதிமுகவில் ஒருபிரிவினர் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசையில், சிவிசண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் தனி அணியாக  பிரிந்து சென்றனர். அவர்கள்மீது கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எடப்பாடி தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. இதனால் தங்களது பதவி காலியாகும் என்ற நோக்கில், சண்முகம் அணியினரும் சபாநாயகரிடம் மனு அளித்தார்.

இந்த பரபரப்புக்கு மத்தியில், அதிருப்தி அணியைச் சேர்ந்த பலர் எடப்பாடி பக்கம் சாய்ந்த நிலையில், ஒருசிலர் அதிமுக மூலம் ஜெயித்த எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. மேலும், கட்சி தாவல் தடை புகார் நிலுவையில் இருக்கும்போது, இந்த விஷயத்தில் சபாநாயகர் முடிவு எதேச்சதிகரமானது, சட்டப்படி தவறு என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில்,  தவெக அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாதது அவர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் மேலும் சிலர் எடப்பாடி பக்கம் சாய்ந்தனர். இதனால்,  சி.வி.சண்முகம் தரப்பு அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தது. இந்த சூழலில் தான் இன்று காலை அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றிணைந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பான வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

” எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “

– அம்மா கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!

இனி நமக்குள் பிரிவில்லை… இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை.. ​

நம் இலக்கு ஒன்றுதான்… அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே!

நாளை நமதே! தமிழ்நாடும் நமதே!

#என்றென்றும்_அதிமுககாரன் 

என பதவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக  பிரிந்த அதிமுக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]