கோவை: மே 25-ந்தேதி முதல் கால்நடை மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கட்டுப்பாட்டில், நான்கு அரசு கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. மேலும் பல தனியார் கல்லூரிகளும் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்பு (பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச்) மற்றும் நான்கு ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (பி.டெக்), பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), கோழியின தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (பி.டெக்) ஆகியவை உள்ளன.
கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்புகளுக்கு 360 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 54 இடங்கள் (15 சதவீதம்) போக மீதமுள்ள 306 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.
பி.டெக் படிப்புகளுக்கு மொத்தம் 100 இடங்கள் உள்ளன. இதில் உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 40 இடங்களில் 6 இடங்கள் (15 சதவீதம்) இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு புதிதாக சேலம் தலைவாசல், தேனி வீராபாண்டி, உடுமைப்பேட்டையில் தலா 40 இடங்களுடன் மூன்று கல்லூரிகள் செயல்பட தொடங்குகின்றன. அப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையானது பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பம் விநியோகம் வரும் 25ந்தேதி தொடங்குகிறது.