சென்னை: தி.மு.கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தொகுதி மறுவரையறைக்கு எதிரான கருப்புக்கொடிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இன்று (ஏப்.15) வெளியிட்டுள்ள சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

வணக்கம்!

தமிழ்நாட்டின் வாசல் வரை வந்துவிட்ட பேராபத்தைப் பற்றி நேற்று நான் வீடியோவில் சொல்லி இருந்தேன்.

Delimitation என்ற பெயரில், தனது லிமிட்டைத் தாண்டி, பா.ஜ.க. அரசு, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கிறது!

வடமாநிலங்களுக்கு அரசியல் வலிமையை மேலும் வாரி வழங்குவது போன்றோ, தென் மாநிலங்கள் அரசியல் வலிமையை இழப்பது போன்றோ நடந்தால், “தமிழ்நாடு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது, ஒவ்வொரு குடும்பமும் தெருவுக்கு வந்து போராடும்” என்று சொல்லி இருந்தேன். யார் நல்லது சொன்னாலும் கேட்காத ஒன்றிய பா.ஜ.க. அரசு, இதையும் கேட்கவில்லை.

சட்டத் திருத்தம் கொண்டு வந்து, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரலை ஒடுக்கப் பார்க்கிறார்கள்! நாளைக்கு கொண்டு வரப் போகும் சட்டத் திருத்தத்தால், வட மாநிலங்களுக்கும் – தென் மாநிலங்களுக்குமான உறுப்பினர்கள் எண்ணிக்கை வேறுபடும்.

சும்மா, பெயரவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தொகுதியை அதிகரிக்கிறோம் என்று சொல்லிவிட்டு, அவர்களுக்கு சாதகமான வட மாநிலங்களுக்கு, மிக மிக கூடுதலாக தொகுதிகளை அதிகரித்து, நம்முடைய தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவமே தேவையில்லை என்ற நிலைமையை கொண்டு வரப் போகிறார்கள்! இதைத்தான் எங்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என சொல்கிறோம்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காகத் தென் மாநிலங்களுக்கு தண்டனையா இது? தேச நலனுக்காக – தேச வளர்ச்சிக்காக நாங்கள் துணை நின்றால், எங்களின் அரசியல் உரிமையையே பறிப்பீர்களா? இதை விடக் கொடுமை என்ன இருக்க முடியும்?

பிரதமர் மோடி அவர்களே! தமிழர்களையும் – தென் மாநில மக்களையும் இரண்டாம் தர குடிமக்களாக்கப் பார்க்கிறீர்கள்!

டெல்லி பா.ஜ.க.வுக்கு தமிழர்கள் யார் என்று காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழ்நாட்டின் குரல் வளையை நெரிக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நாளைக்கு நாடாளுமன்றத்தில் அவர்கள் கொண்டு வரப் போகும் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பைக் காட்டும் வகையில், தமிழ்நாட்டில் அனைவரும் நம்முடைய வீட்டில் கருப்புக் கொடியை ஏற்றுவோம். கருப்புச் சட்டத்தை எதிர்த்து நம் எதிர்ப்பின் அடையாளமாக, கருப்புக் கொடியை ஏற்றுவோம். இந்தியாவை இருண்ட காலத்துக்கு அழைத்துக் கொண்டு போகும், எதேச்சாதிகார பா.ஜ.க. அரசுக்கு எதிராக கருப்புக் கொடி ஏற்றுவோம்.

இது தமிழ்நாட்டுக்கும் – டெல்லிக்குமான தேர்தல் என நான் சொன்னதை, பா.ஜ.க. தொடர்ந்து நிரூபிக்கிறது! நான் சொன்னதன் உண்மையான அர்த்தத்தை பா.ஜ.க.வே உணர்த்திவிட்டது.

அவர்களுக்கு தமிழ்நாடு முன்னேறிவிடக் கூடாது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குரல்கூட நாடாளுமன்றத்தில் ஒலிக்கக் கூடாது. அதற்கான சதித் திட்டத்தைச் சட்டமாகவே கொண்டு வருகிறார்கள். சதியை எப்படி சட்டமாக ஏற்க முடியும்?

கருப்புச் சட்டத்துக்கு எதிராகக் கருப்புக் கொடி ஏற்றுவோம். ஒவ்வொரு வீட்டிலும், பொது இடங்களிலும் ஏற்றுவோம்!

மீண்டும் எச்சரிக்கை செய்கிறேன்! மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை முடிவு செய்யக் கூடாது! கருப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது! 8 கோடித் தமிழர்களின் ஒற்றைக் கோரிக்கை இது.

அரசியல் எல்லைகளைக் கடந்து, தமிழ்நாட்டின் உரிமையைக் காக்க தமிழ்நாடே ஓங்கி ஒலிக்கட்டும்!

தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

வெல்வோம் ஒன்றாக!

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]