
அதாவது, இந்த கூட்டத்தொடரில், முக்கிய மசோதாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன
அரசியலமைப்பு (131-வது திருத்த) மசோதா, 2026: 33% மகளிர் இடஒதுக்கீட்டிற்கு இடமளிக்கும் வகையில், மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543-லிருந்து 850-ஆக (மாநிலங்களிலிருந்து 815 மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 35) உயர்த்த இம்மசோதா முன்மொழிகிறது.
இந்த அரசியலமைப்பு திருத்தம் (Constitutional Amendment) மசோதா என்பதால், இதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற சாதாரண பெரும்பான்மை மட்டும் போதாது.
மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும், வருகை தந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3rd Majority) ஆதரவு கட்டாயம் தேவை. அதாவது 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில், தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) வெற்றி பெற தோராயமாக 362 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படும்.
ஆனால், தற்போதைய ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பலம் மக்களவையில் சுமார் 293 எம்பிக்கள் மட்டுமே ஆகும். எனவே, பாஜக தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு தாமாகவே முன்வந்து இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கான தனிப்பெரும்பான்மை பலம் மக்களவையில் இல்லை. அதேபோல, மாநிலங்களவையிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் கிடையாது.
மேலும், இது மாநிலங்களின் உரிமைகளை நேரடியாக பாதிக்கும் விவகாரம் என்பதால், இந்தியாவின் 50 சதவீத மாநில சட்டமன்றங்களும் இதற்கு ஒப்புதல் (Ratification) அளிக்க வேண்டும். எனவே, எதிர்க்கட்சிகளான ‘இந்தியா’ கூட்டணியின் ஆதரவோ அல்லது பிற மாநிலக் கட்சிகளின் ஆதரவோ இல்லாமல் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது அரசுக்கு சாத்தியமற்ற ஒன்றாகும்.
இந்த நிலையில் மத்திய பாஜக அரசு, அரசியல் சட்ட திருத்தத்தை மேற்கொள்ள தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலரும் ஆதரவு அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.