சென்னை: தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழை காரணமாக  சென்னை சேலம் விமான சேவை உள்பட 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய புயல் சின்னம், அதாவது காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து  இன்று  (நவம்பர் 30ஆம் தேதி)  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் டிசம்பர் 2ஆம் தேதி வாக்கில் புயலாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளத.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் , “வடஇலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தினால் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் மழை நீடிக்கும். குறிப்பாக டிசம்பர் 1ஆம் தேதி அன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், வடதமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. வடதமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக, ராமநாதபுரத்தில் 9 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை 16 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இன்று (நவம்பர் 30) பகல் 1 மணி வரை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், வேலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்துக்கு வரவேண்டிய 4 விமானங்கள், புறப்பட வேண்டிய 4 விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை – சேலம், சென்னை – ஆந்திரா, சென்னை – அபுதாபி, இலங்கை – சென்னை, ஷாங்காய் – சென்னை, ஆந்திரா – சென்னை, சேலம் – சென்னை உள்ளிட்ட 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு – அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா ஆய்வு…