சென்னை; ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மத்திய சட்ட ஆணையத்துக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
பாராளுமன்றத்துக்கு, சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், ‘ ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதுதொடர்பாக மாநில கட்சிகளிடம் மத்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டு வருகிறது. இதை நடைமுறைப்படுத்தினால், கோடிகணக்கான ரூபாய் செலவினம் குறையும் என மத்தியஅரசு கூறுகிறது.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்தியஅரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு உள்பட புதிதாக பதவி ஏற்றுள்ள மாநிலங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி உள்பட பாஜக அல்லாத மாநில அரசுகள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மத்தியஅரசின் இந்த நடவடிக்கைக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த திட்டம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, தி.மு.க. எம்.பி. வில்சன் டெல்லியில் உள்ள சட்ட ஆணையத்தில் நேற்று நேரடியாக அளித்தார்.
அந்த கடிதத்தில், 1951-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. இதன்பின்பு சில மாநிலங்களில் ஆட்சிக்காலம் முடியும் முன்பே அரசு கலைக்கப்பட்டதால் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்த இயலவில்லை.
6, 7, 9, 11, 12 மற்றும் 13-வது மக்களவை முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் தொடர்ந்து ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்த முடியாமல் போனது. ‘அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற மக்களவையின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். அமைச்சரவை முடிவு அடிப்படையிலும், அவசர பிரகடனத்தை சுட்டிக்காட்டி கவர்னரும் ஆட்சியை கலைக்கலாம்.
ஒரு ஆட்சி என்னென்ன காரணங்களுக்காக கலைக்கப்படலாம் என எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தி உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை காரணம் காட்டி ஒரு ஆட்சியை கலைக்க முடியாது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பது என்பது மக்கள் எண்ணத்துக்கு எதிரானது. இந்த திட்டத்துக்காக அரசை கலைத்தால் தேர்தலுக்காக செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் வீணாகும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் ஆகும். எனவே, இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு! எடப்பாடி பழனிச்சாமி கடிதம்..