கோவை; கோவையில் கடந்த 23ந்தேதி அங்குள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கார் குண்டு வெடிப்பு நடைபெற்றதில் உயிரிழந்த ஜமேசா முபின்,  ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  முபினுக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.

கோவை கோட்டைமேட்டில் கடந்த 23-ந்தேதி கார் வெடித்து சிதறியதில் அந்த காரில் வந்த முபின் என்பவரும் உயிரிழந்தார். இந்த விஷயத்தில் முதலில் காரில் உள்ள சிலிண்டர் வெடித்ததாக காவல்துறையினரும், தமிழகஅரசும் கூறி வந்த நிலையில், கார் வெடிப்பை ஆய்வு செய்த காவல்துறையினர், அதில் கிடைத்த பொருட்கள் மூலம், அது கார் குண்டுவெடிப்பு என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கு என்ஐஏ- விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையைத் தொடர்ந்து தினசரி பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த கார் குண்டுவெடிப்பு தொடர்ந்து முக்கிய நபர்கள் 16 பேரை காவல்துறையினர் தேடி வரும் நிலையில், நெல்லை, திருவாரூர் உள்பட பல இடங்களில், சந்தேகத்திற்குரிய பலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கார் குண்டு வெடிப்பு நிகழ்த்திய முபின் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பது தெரிய வந்துள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு முன்பு அவர், க தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகள் போல், தனது  உடல் முழுவதும் உள்ள முடிகளை முழுமையாக மழித்து சேவ் செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அவரது குடும்பத்தினரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்த என்ஐஏ அதிகாரிகள், அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளனர்.

கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர் என்பதும்,  பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார். அதன்படி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான நஸ்ரத்தை(23) முபின் திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக,  திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை.

பின்னர் தனது பெங்களூர் வேலையை விட்டுவிட்டு, கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்தவர்,  அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தா ர். இவருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் திடீரென தான் வேலை பார்த்து வந்த புத்தக கடை வேலையை முபின் விட்டு விட்டார். இதனால் குடும்பத்தில் வறுமை தாண்டவமாடத் தொடங்கியது.

வேலையை விட்டது ஏன் என அவரது மனைவி கேட்டதற்க, தனக்கு அடிக்கடி நெஞ்சுவலி வருவதாகவும், அதனால்  தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும்  தெரிவித்தவர், திடீரென, வீட்டில் இருந்து வெளியேறி விடுவதாகவும் அவரது மனைவி தெரிவித்து உள்ளார். பின்னர் சில மாதம் கழித்து வீடு திரும்புவர், அங்கு வேலை பார்க்கிறேன், இங்கு வேலை பார்க்கிறேன் என் அவ்வப்போது ஒவ்வொரு பொய்யாக கூறி வந்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்க முன்பு மீண்டும் கோட்டை மேடு வந்த முபின், தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதன்படி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து மனைவி, குழந்தைகளுடன் குடியேறி உள்ளார். அப்போது முபின் வீட்டிற்குள் 4 பெட்டிகளை எடுத்து வந்தார். இதனால் நஸ்ரத்துக்கு சந்தேகம் ஏற்படவே எதற்காக இந்த 4 பெட்டிகள். அதில் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு முபின், இந்த பெட்டிகளில் பழைய துணிகள் தான் உள்ளது என கூறியுள்ளார்.

ஆனால் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகு, அவரது வீட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையின்போதுதான் அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், கடந்த மாதம் 20-ந்தேதி, முபினின் மனைவி நஸ்ரத்துக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். முபின் எப்போதும் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருப்பார். மேலும் எந்நேரமும் செல்போனில் ஏதாவது பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நஸ்ரத்தின் வீட்டிற்கு சென்ற முபின் வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார். மேலும் குடும்பத்தினர் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டும் உள்ளார். அன்று மாலையே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்று உள்ளார். அப்போது குழந்தை களுக்கு பிடித்த ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு, முபின் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தண்ணீரை சேமிப்பதற்கு டிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார். அப்போது 3 நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 22-ந் தேதி இரவு நஸ்ரத் கணவருக்கு எப்போது வீட்டிற்கு வருவாய் என மெசேஜ் அனுப்பினார். அதற்கு நாளை வருவதாக கூறியுள்ளார். அப்போது நஸ்ரத் குழந்தைகள் உன்னை தேடுகின்றனர். வீடியோ காலிலாவது பேசு என மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் முபின் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் முபினை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதுவே முபின் அவரது மனைவியிடம் கடைசியாக பேசியது என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள், டைரிகளை ஆய்வு செய்தபோது, அங்கிருந்த சிலேட்டில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் அரபு மொழியில் சில வாசகங்கள் இருந்தன. மேலும் தமிழ்மொழியில் எழுதப்பட்டிருந்த வாசகத்தில், ‘அல்லாவின் இல்லத்தின் மீது கைவைத்தால் வேரறுப்போம்’ என்று கூறி இருந்தார். மேலும் முபின் வெள்ளைத்தாளில் எழுதிய வாசகங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில் ஒரு தாளில், ‘ஜிகாத்தின் கடமைக்கான அழைப்பு’ என்று எழுதி இருந்தார். மேலும் ‘புனிதப் போரை நடத்துவது இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் கடமை’ என்றும் எழுதி இருந்தார். இந்த வாசகங்கள் ஜமேஷா முபின் தனது கைப்பட எழுதியுள்ளதாக தெரிகிறது. மேலும் முபின் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன்  தொடர்பில் இருந்தும் தெரிய வந்துள்ளது. இதனால், முபின் ஒரு பயங்கரவாதிதான் என்ஐஏ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் திடுக்கிடும் ‘சதி’ அம்பலம்!