உடல்நலப் பாதிப்பு காரணமாக உயிரிழந்த குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் உடல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு தி நகர் நடேசன் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று அதி காலை எடுத்து வரப்பட்டது. அங்கு அவரது நிறுவன ஊழியர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
எச்.வசந்தகுமார் உடலுக்கு அவரது உறவினர்கள் மற்றும் வசந்த் & கோ நிறுவன நிறுவன ஊழியர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். வணிகர்சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்பட வணிகர்கள், அரசியல் கட்சியினர் என ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் வசந்தகுமார் உடலுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து அவரது மனைவி மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறினார்.
காலை 10.30 மணிக்குமேல் வசந்தகுமார் உடல் காங்கிரஸ் தலைமைஅலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது.
மதியம் 2 மணிக்கு மேல் சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது. நாளை காலை 10 மணி அளவில் அகஸ்தீஸ்வரத்தில் வசந்தகுமார் எம்.பி. உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.