சென்னையின் பிரபலமான வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனமான விவேக்ஸ், 60 ஆண்டுகளுக்கும் மேலான தனது சில்லறை விற்பனை வரலாற்றுக்குப் பிறகு, பல்வேறு பகுதிகளில் இருந்த கடைகளை மூடியுள்ளது.
இதுகுறித்து குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1965 மே மாதம் முதல் சென்னையின் சில்லறை விற்பனை வரலாற்றில் விவேக்ஸ் இடம்பெற்று வருகிறது. தற்போது சில்லறை மற்றும் ஆன்லைன் விற்பனையை தற்காலிகமாக நிறுத்த குடும்பம் முடிவு செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

வாடிக்கையாளர்களின் நிலுவை ஆர்டர்கள் எதுவும் இல்லை என்றும், அனைத்து ஊழியர்களுக்கும் முழுமையாக சம்பளம் வழங்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொழிலில் ஏற்பட்ட பிரச்னையால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், குடும்பத்தின் தனிப்பட்ட முடிவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே கடைகள் மூடப்பட்டதற்குக் காரணம் என சில்லறை விற்பனைத் துறையைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர். இருந்தபோதும், இதுகுறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.
இதற்கிடையே, இது நிரந்தர முடிவு அல்ல; தற்காலிக இடைவேளை மட்டுமே என குடும்பத்துடன் தொடர்புடைய ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், நங்கநல்லூர், சேலையூர், வடபழனி ஆகிய 3 இடங்களில் விவேக்ஸ் இயங்கி வந்த வாடகைக் கடைகளை வசந்த் & கோ நிறுவனம் எடுத்துக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். விருகம்பாக்கத்தில் சுமார் 15,000 சதுர அடி குடோனையும் வசந்த் & கோ எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1965-ல் மயிலாப்பூர் சமஸ்கிருதக் கல்லூரி அருகே பி.ஏ. லட்சுமி நாராயண செட்டியால் தொடங்கப்பட்ட விவேக்ஸ், 1969-ல் புரசைவாக்கத்திலும், 1980-ல் தி.நகரிலும் கிளைகளைத் திறந்தது. குறிப்பாக தி.நகர் கடை, பண்டிகை காலங்களில் பெரும் கூட்டத்தை ஈர்த்தது.
பி.ஏ. லட்சுமி நாராயண செட்டியின் மறைவுக்குப் பிறகு அவரது சகோதரர் பி.ஏ. கோதண்டராமன் செட்டி நிறுவனத்தின் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தார்.
கண்ட்ரி ஒயிட் இருந்த நடுத்தரக் குடும்பங்களுக்கு விவேக்ஸ் வெறும் எலக்ட்ரானிக்ஸ் கடையாக மட்டும் இல்லாமல், ஒரு உணர்வாகவே இருந்தது. ஆன்லைன் விற்பனை வருவதற்கு முன்பே, பண்டிகை சலுகைகளுக்காக தி.நகர் கடை முன்பு இரவு முழுவதும் காத்திருந்தவர்களும் உண்டு.
1965-லேயே குறைந்த வருமானம் கொண்டவர்களும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும் வகையில், வெறும் ₹1 செலுத்தி பொருட்களைப் பெறும் ஹையர் பர்சேஸ் திட்டத்தையும் விவேக்ஸ் அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக 1991-ல் விவேக்ஸ் ஹையர் பர்சேஸ் அண்ட் லீசிங் நிறுவனமும் தொடங்கப்பட்டது.
குடும்பத்தினர் இதை “தற்காலிக இடைவேளை” எனக் கூறியுள்ள நிலையில், நீண்ட கால வாடிக்கையாளர்கள் விவேக்ஸ் மீண்டும் வர வேண்டும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.