சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய சட்டப்பேரவை–தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்பட உள்ளது என்று அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்காக பட்டினப்பாக்கத்தில் உள்ள 25.16 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் (TNHB) மற்றும் சென்னை மாநகராட்சி (GCC) ஆகியவை சனிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளன. இந்தத் திட்டத்துக்கு கொள்கை அளவில் நிர்வாக ஒப்புதல் வழங்குவதற்கான அரசு உத்தரவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடம் 15 மாடிகளைக் கொண்டதாகவும், சுமார் 20 லட்சம் சதுர அடி கட்டுமானப் பரப்பளவுடனும் அமைய உள்ளது.

சாந்தோம் பிரதான சாலையில் இருந்து இந்த இடத்துக்குச் செல்லும் வசதி உள்ளது. இந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பு ஒரு சதுர அடிக்கு ரூ.22,000 எனக் கூறப்படுகிறது. இதன்படி, நிலத்தின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.2,047 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வளாகம் ரூ.1,200 கோடி செலவில் கட்டப்படும் என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக அரசு முதலில் 3 இடங்களைப் பரிசீலித்தது:

பட்டினப்பாக்கம், கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், நந்தம்பாக்கத்தில் உள்ள ஃபின்டெக் சிட்டிக்கு எதிரே உள்ள இடம்

இதில், பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலம் ஒரே இடத்தில் கிடைப்பதால், இந்த இடம் மிகவும் பொருத்தமானதாக உள்ளது என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசு சார்பில் முறையான கோரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மயிலாப்பூரில் உள்ள TNHB-க்கு சொந்தமான 21.37 ஏக்கர் நிலத்தை பொதுத்துறை பயன்படுத்துவதற்கான ஆரம்ப அனுமதியை TNHB சனிக்கிழமை வழங்கியுள்ளது.

இந்த நிலம் 3 சர்வே எண்களில் அமைந்துள்ளது:

சர்வே எண் 4593/1 – 0.55 ஏக்கர்
சர்வே எண் 4593/29 – 0.15 ஏக்கர்
சர்வே எண் 4593/33 – 20.67 ஏக்கர்

இந்த நிலங்கள் 1958-ம் ஆண்டு குடியிருப்புத் திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்டவை.

1963 முதல் 1968-ம் ஆண்டு வரை இங்கு அரசு ஊழியர்களுக்கான 1,112 குடியிருப்புகளும், TNHB-க்கான 96 குடியிருப்புகளும் கட்டப்பட்டன.

பின்னர் 1986-ம் ஆண்டு மேலும் 60 குடியிருப்புகளும், 1998-ம் ஆண்டு 112 குடியிருப்புகளும் கட்டப்பட்டன. இதன் மூலம் அங்கு இருந்த குடியிருப்புகளின் மொத்த எண்ணிக்கை 1,380 ஆக உயர்ந்தது.

இதில் 1,284 குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததால் அவை இடிக்கப்பட்டன. கட்டிடங்கள் இடிக்கப்பட்ட பிறகு அந்த இடம் காலியாகவே இருந்து வருகிறது.

TNHB-க்கு சொந்தமான மீதமுள்ள 96 குடியிருப்புகளையும் இடிப்பதற்கான நடவடிக்கைகளை வீட்டுவசதி வாரியம் தற்போது தொடங்கியுள்ளது.

“இந்த நிலத்தின் மதிப்பை அரசு விதிகளின்படி மதிப்பீடு செய்து, அதற்கான தொகையை TNHB-க்கு வழங்க வேண்டும். மேலும், நிலத்தை அரசுக்கு மாற்றுவதற்குப் பதிலாக மாற்று நிலம் வழங்குவதற்கான வாய்ப்பு இருந்தால், அதையும் அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று TNHB தெரிவித்துள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் 2 நிலப்பகுதிகளைப் பயன்படுத்தவும் அனுமதி

சென்னை மாவட்ட ஆட்சியருக்கு TNHB அனுப்பியுள்ள கடிதத்தில், சர்வே எண் 7588/2 மற்றும் 4592/79 ஆகியவற்றின் கீழ் உள்ள நிலங்களைப் பயன்படுத்துவதற்கு தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

1997-ம் ஆண்டு மயிலாப்பூர் கிராமத்தில் உள்ள சர்வே எண் 7588/2-ல் 1.13 ஏக்கர் நிலம், அரசு வாடகைக் குடியிருப்புகள் கட்டுவதற்காக அரசுக்கு மாற்றி வழங்கப்பட்டது.

அதேபோல், சர்வே எண் 4592/79-ல் உள்ள 1.73 ஏக்கர் நிலம் தொடர்பான கையகப்படுத்தல் ஆவணங்கள் மற்றும் பிற பதிவுகள் தற்போது கிடைக்கவில்லை என்று TNHB தெரிவித்துள்ளது.

எனினும், வருவாய்த்துறை பதிவுகளில் இந்த நிலம் அரசு புறம்போக்கு நிலம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சென்னை மாநகராட்சியும் பொதுத்துறைக்கு 0.93 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி. சாமீரன் செப்டம்பர் 5-ம் தேதி அனுப்பிய கடிதத்தின்படி, சர்வே எண் 4593/2-ல் உள்ள இந்த நிலம் சாலை பயன்பாட்டுக்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

“TNHB மற்றும் சென்னை மாநகராட்சியிடம் இருந்து கிடைக்கும் நிலங்கள் சேர்ந்து சுமார் 25 ஏக்கராகும். மேலும், வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சில நிலங்களையும் சேர்த்தால், மொத்த திட்டப் பகுதி சுமார் 26.5 ஏக்கராக இருக்கும்” என்று அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது.