சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், நாளை 2வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத,  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி நிறைவடைந்த  நிலையில், நாளை (அக்டோபர் 9ந்தேதி) 2வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலும் நாளை நடைபெற உள்ளது.

இதையொட்டி, தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு, தேவையான வாக்காளர் பட்டியல், நான்கு பதவிகளுக்கான நான்கு வண்ண வாக்கு சீட்டுகள், அழிய மை, சீல் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சாக்கு பைகள் மற்றும் வாக்கு பதிவு பெட்டிகள் வாகனங்கள் முலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.

2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் நேற்று மாலை 5 மணியுடன் பரப்புரை ஓய்ந்தது. டாஸ்மாக் கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு தனியார் நிறுவனங்களும் விடுமுறை வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.