9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்.. அதிமுகவின் பரிதாப நிலைமை..

Must read

நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்.. அதிமுகவின் பரிதாப நிலைமை..
90 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெற்று ஏறக்குறைய அதிமுக துடைத்தெறியப்பட்டுள்ளது..
கட்சியின் பொன்விழா ஆண்டு இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள நிலையில் கட்சி நிலைமை புண்ணாகி இருக்கிறது. வலிய வந்து மடியில் விழுந்து ஆட்சியை சாமர்த்தியமாக நான்காண்டுகளுக்கு நடத்த முடிந்தது எடப்பாடி பழனிச்சாமியால். ஆட்சியில் இருந்தபடியே சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்தித்த காரணத்தினால் 60க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று சட்டமன்ற எதிர்க்கட்சியாய் கௌரவமாக வரவும் முடிந்தது.
ஆனால் அதே எடப்பாடி பழனிச்சாமியால் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் கட்சியை தூக்கி நிறுத்தி தேர்தலில் வெற்றியை காண செய்ய முடியவில்லை.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இதில் பங்கு உண்டு.
நாம் அன்று முதலே சொல்லி வருகிறோம், அதிமுகவுக்கு இரட்டை தலைமை என்பதெல்லாம் சரிப்படாது. கலகம் பிறந்து யாராவது ஒற்றைத் தலைமைக்கு வராதவரை அந்த கட்சிக்கு பின்னடைவுதான்.. தேர்தல் தோல்விக்கு முக்கியமான விஷயம் கட்சியை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதில் அதிமுக தலைமை தொடர்ந்து கோட்டைவிட்டு வருகிறது என்பதுதான்.
அதிமுகவை பொறுத்தவரை அந்தக் கட்சிக்கு மிகப் பெரிய தலைவலி பாஜகவுடனான கூட்டணி.
மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது என்பது ஊரறிந்த விஷயம்.
பெட்ரோல் டீசல் எரிவாயு சிலிண்டர் விலை விலை உயர்வு, நீட் நுழைவுத்தேர்வு,மதவாத அரசியல் என பாஜகவின் அத்தனை லீலைகளுக்கும் ஆட்சி போன பிறகும் அதிமுக துதி பாடுவதை கட்சியின் அடிமட்ட தொண்டர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
கூலித்தொழிலாளியை அடித்துக் கொன்றதாக ஒரு வழக்கில் ஆளுங்கட்சி எம்பி சிக்குகிறார். அதைக்கூட வேடிக்கை பார்க்கிறது எதிர்க்கட்சியான அதிமுக என்றால், அரசியல் சோம்பேறித்தனத்திற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு இருக்க முடியும்?
அதிமுக என்பது, தொடங்கப்பட்டதிலிருந்தே அது ஒரு தனிமனித கட்சி. வித்தியாசமான வரலாறு கொண்டது.
எம்ஜிஆர் தலைமையிலான அண்ணா திமுகவிற்கும் பின்னால் வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கும் சம்பந்தமே கிடையாது என்றே சொல்லலாம்.
“எனக்குப் பிறகு ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடுங்கள். அவரிடம் நான் கட்சியை ஒப்படைத்து விட்டுப் போகிறேன்” என்றெல்லாம் எம்ஜிஆர் சொல்லவில்லை.
எம்ஜிஆர் மறைந்த பிறகு கட்சிக்குள் நடந்த இரு தரப்பு போட்டியில் ஜெயலலிதா தனது தனிப்பட்ட செல்வாக்கினால் பெற்ற தேர்தல் வெற்றியை வைத்து கட்சியை கைப்பற்றினார்.
முழுக்க முழுக்க எம்ஜிஆர் துதி பாடாமல் வெற்றியோ தோல்வியோ அது தன்னால் மட்டுமே கிடைத்ததாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். அதன்படியே அரசியலும் செய்தார்.
அதேபோலத்தான், தாம் மறைந்தால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நான்காண்டுகள் ஆட்சி செய்வார் என்றெல்லாம் ஜெயலலிதா நினைத்து பார்த்திருப்பாரா என்ன?
அவரவர் சாமர்த்தியம் என்பதே அதிமுகவின் அரசியல் தலைமை வரலாறாக இருந்து வருகிறது..
எம்ஜிஆர், இரட்டை இலை மற்றும் ஜெயலலிதா ஆகிய மூன்று விஷயங்கள் அதிமுக தொண்டர்கள் மத்தியில் அசைக்கமுடியாத செல்வாக்கை பெற்றவை. இவற்றிற்கு தனி மரியாதை கொடுத்து கவனம் செலுத்தினாலே அதிமுக தொண்டர்களை உற்சாகமாக வைத்திருக்க முடியும்.
ஆனால் அதை விட்டுவிட்டு சேராத இடம் தனிலே சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக கட்சியை கரைத்துக் கொண்டு இருக்கிறார்கள்..
துணை முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படாமல் அதிமுக பொதுச் செயலாளர் பதவி வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் அன்றே துணிச்சலுடன் முடிவு எடுத்திருந்தால் இந்நேரம் முழுக்க முழுக்க கட்சி அவர் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும்.
சர்வாதிகாரம் மிக்க ஒற்றை தலைமை..
தொண்டர்கள் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைமை.. அது அமையா தவரை அதிமுகவுக்கு சிக்கல்தான்..

More articles

Latest article