டில்லி

நிதி அமைச்சகத்தின் நிதிப் புலனாய்வுத் துறை அதிகம் அபாயத்தில் உள்ள 9500 வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளத்.

கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் மாதம் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.    அப்போதிலிருந்து அமலாக்கப் பிரிவு அனைத்து நிதி நிறுவனங்களையும் கிராம வங்கிகளையும், கூட்டுறவு வங்கிகளையும் கண்காணித்து வருகிறது.   இந்த வங்கிகளின் மூலம் செல்லாத ரூபாய் நோட்டுக்கள் பெருமளவில் மாற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து கண்காணிப்பு கடுமையாகி உள்ளது.

இந்தக் கண்காணிப்பை தொடர்ந்து நிதிப் புலனாய்வுத் துறை அபாயத்தில் உள்ள வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.   அதில் மொத்தம் 9500 நிறுவனங்களின் பெயர்கள் உள்ளன.    இவைகள் அனைத்தும்  ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி ரொக்க முதிலீட்டை பெற்றுக் கொண்டு முன் தேதியிட்ட வைப்பு நிதி சான்றிதழ்களை கொடுத்தவை எனக் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ”இந்த நிறுவனங்கள் ஒரு விசேஷ அதிகாரியை நியமித்து அவர் மூலம் தங்களின் வரவு செலவுக் கணக்கையும் ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேல் முதலீடு செய்தவர்களின் கணக்கையும் தணிக்கை செய்ய வேண்டும்.    அத்துடன் இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் பற்றிய முழு விவரங்களும்,  அவர்களின் அடையாளங்களும் கண்டறியப்பட்டு நிதிப் புலனாய்வுத் துறையிடன் அளிக்க வேண்டும்”  என நிறுவனங்களுக்கு நிதி அமைச்சகம் உத்ஹரவிட்டுள்ளது.