சென்னை: காலியாக உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வாக்காளர்  பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில்  ஏற்கனவே 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், புதிதாக பிரிக்கப்பட்ட  9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்தது.  உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் தேர்தலை முடிக்க உத்தரவிடப்பட்டது.

இதைடுத்து, தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி, இந்த 9 மாவட்டங்களில்  இன்று வாக்காளர் பட்டியல் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக மாவட்டங்களில் வெளியிடப்படவுள்ளது. நேற்று ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பாளர் கையேடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

ஏற்கனவே வாக்குச்சாவடிகள் அமைத்தல், மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக வாக்காளர் பட்டியலை இன்று அந்தந்த மாவட்டங்களில் வெளியிடப்படுகிறது.

புதிதாக பிரிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்காக பணிகளை மாநில தமிழ்நாடு தேர்தல் ஆணையம் விரைவாக செய்து வருகிறது. விரைவில் தேர்தல் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.