ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில், 8 வயதில் திருமணம் செய்து கொண்ட சிறுமி தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 250 கி.மீ., தொலைவில் உள்ள கோடா என்ற நகரத்தின் அருகே உள்ள கிராமத்தில் பிறந்தவர் ருபா யாதவ். தற்போது இவருக்கு 20 வயதாகிறது. 8 வயதில் 3ம் வகுப்பு படித்த போது இவருக்கு திருமணம் நடந்தது.

அவரது கணவர் சங்கர் லால். திருமணத்தின் போது அவருக்கு வயது, 12. திருமணத்திற்கு பிறகு ரூபா தொடர்ந்து படிக்க அவரது மைத்துனர் மிகுந்த ஆதரவு அளித்தார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 84 சதவீத மதிப்பெண் பெற்ற ரூபா யாதவ், 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்க, 6 கி.மீ., தொலைவில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்றார்.

12ம் வகுப்பில் அவர் 84 சதவீத மதிப்பெண் எடுத்தார். இதை தொடர்ந்து சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்திய மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வை எழுதினார். முதல் முறை, 515 மதிப்பெண், 2வது முறை, 503 மதிப்பெண் பெற்றார்.

சமீபத்தில் நடந்த மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான, ‘நீட்’ தேர்வில் 603 மதிப்பெண் பெற்றார். தற்போது, மருத்துவ படிப்புக்கான கவுன்சிலில் பங்கேற்றார். அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று நம்புகிறார். சிறிய வயதில் திருமணம் நடந்து விட்டாலும் தொடர்ந்து படித்து சாதனை படைத்த ருபா யாதவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.