டெல்லி:

 

ஜிஎஸ்டி.யால் நாட்டின் மொத்த உற்பத்தி 1.5 சதவீதம் உயரும் என்பது அர்த்தமற்றது. மேலும் அமல்படுத்தப்பட்டிருப்பது முறையான ஜி.எஸ்.டியே இல்லை என்று நிதிஆயோக் உறுப்பினர் பிபேக் டெப்ராய் தெரிவித்துள்ளார்.

 

ஹஜ்தக் டிவி.யில் ஜிஎஸ்டி குறித்த விவாதத்தில் கலந்துகொண்ட நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் டெப்ராய் பேசுகையில், ‘‘தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஜி.எஸ்.டி மூலம் நாட்டின் மொத்த உற்பத்தி 1 முதல் 1.5 சதவீதம் வரை உயரும் என்பது அர்த்தமற்றது. முற்றிலும் குப்பையான ஒரு ஜிஎஸ்டி தான் அமல்படுத்தப்பட்டுள்ளது. சரியான ஜிஎஸ்டி இது கிடையாது.

உண்மையான திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அடுத்து வரும் காலாண்டுகளில் நாட்டின் மொத்த உற்பத்தி உயரும் என்ற மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி மற்றும் வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா ஆகியோரது கருத்துக்களுக்கு நான் உடன்படவில்லை’’ என்றார்.

 

மேலும், அவர் கூறுகையில், ‘‘உலகில் 6 முதல் 7 நாடுகளில் மட்டுமே ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டுள்ளது. 140 முதல் 160 நாடுகளில் ஜிஎஸ்டி அமலில் உள்ளது என்று என்று சில குப்பையான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கு ஏற்ப இந்தியாவின் ஜிஎஸ்டி ஏற்றதாக இல்லை. பலதரப்பட்ட அமைப்புகளால் புதிய வரிவிதிப்பில் பிரச்னைகள் ஏற்படும். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு நாட்டின் மொத்த உற்பத்தி சுமார் 1 முதல் 1.5 சதவீதம் வரை உயரும் என்பது அர்த்தமற்ற பேச்சாகும்’’ என்றார்.

 

அவர் தொடர்ந்து பேசுகையில், ‘‘முறையற்ற ஜிஎஸ்டி.யை அமல்படுத்தியிருப்பதால் நாட்டின் மொத்த உற்பத்தி உயருமா? இறங்குமா? என்பதை சரியாக சொல்ல முடியாத நிலை உள்ளது.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாடுகளின் கனடாவை தவிர இதர நாடுகள் ஒருங்கிணைப்புள்ள நாடுகள். குடுவை நுழைவு வாயில் போன்று இருப்பதால் இங்கு ஜிஎஸ்டி அமல்படுத்துவது எளிமையானது. ஜிஎஸ்டி.யால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது. சேவை துறைகள் அனைத்தும் உயரும்’’ என்றார்.