புதுடெல்லி:

போலீஸ் விசாரணையின்போது நடைபெற்று வரும் மரணங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு, பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு 8 முன்னாள் டிஜிபிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 6-ம் தேதி திருட்டு மற்றும் கொலை வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட குஃப்ரான் ஆலம் மற்றும் தஸ்லிம் அன்சாரி ஆகியோர் மர்மமான முறையில் இறந்தனர்.

அவர்களது தொடை மற்றும் உடலில் நகங்களால் கீறப்பட்ட காயங்கள் இருந்தன.

இது குறித்து முதல்வர் நிதிஷ் குமாருக்கு 8 முன்னாள் டிஜிபி-க்கள் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது;

போலீஸ் விசாரணையின்போது சகிப்புத்தன்மை அவசியம். போலீஸ் விசாரணையில் தொடர்ந்து நடக்கும் இத்தகைய அத்துமீறல் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடாது.

தவறு செய்யும் போலீஸார் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கை ஏற்படும். விசாரணை நடத்தும் போலீஸாருக்கு பயிற்சி தர வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு சட்ட உதவிகளும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.