சென்னை: ஜூலை 31ம் தேதி வரை, நடப்பு நிதியாண்டில் இதுவரை  98,036 விவசாயிகளுக்கு 763 ரூபாய் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு இருப்பதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.  கூட்டுறவு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மானிய கோரிக்கை மீதான விவாததின்போது, விவசாயிகளுக்கான பயிர்கடன் குறித்த கொள்கை விளக்கம் அளிக்கப்பட்டது.

கூட்டுறவு சங்கங்கள், உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2020-21ம் நிதியாண்டில் 12 லட்சத்து, 37 ஆயிரத்து 448 விவசாயிகளுக்கு 9 ஆயிரத்து 504 கோடி பயிர்கடன் வழக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 330 பட்டியலின பழங்குடியின விவசாயிகளுக்கு 755 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

 நடப்பு நிதியாண்டியில் ஜூலை 31ம் தேதி வரை 98 ஆயிரத்து 36 விவசாயிகளுக்கு 763 ரூபாய் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், 7,823 பட்டியலின பழங்குடியின விவசாயிகளுக்கு, ரூபாய் 53.30 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

2021-22ம் ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக ரூபாய் 11,500 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு கூட்டுறவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவாதத்தின்போது பேசிய அமைச்சர்  ஐ.பெரியசாமி  விவசாயக்கடன் 5% உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும்,  ‘இந்த ஆண்டு விவசாயிகளுக்கு 11,500 கோடி ரூபாய் கடன் தருவதற்கு அரசு நிர்ணயித்துள்ளது. இதில் 20% கடனை 25% வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 5% விழுக்காடு உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.