காக்கிநாடா: ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் செயல்பட்டு வந்த எண்ணை ஆலை ஒன்றின், எண்ணெய் தொட்டி சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் பெத்தபுரம் மாவட்டம்  ஜி.ராகம்பேட்டை மண்டலத்தில்   அம்பதி சுப்பண்ணா எண்ணெய் தொழிற்சாலை  உள்ளது. இந்த தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள, 24 அடி ஆழமுள்ள எண்ணெய் டேங்கரை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. இதை சுத்தம் செய்வதற்காக  தொழிலாளர் கள் ஒவ்வொருவராக உள்ளே நுழைந்தனர். அவர்கள் அங்கு எழுந்த விஷவாயு தாக்கி மூச்சுத் திணறி இறந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விஷவாயு கசிவு காரணமாக 7 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் சிலர் மயக்கம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பான விசாரணையில், அந்த தொழிற்சாலை  கடந்த ஆண்டு தொடங்கப்பட்டதாகவும், எங்குள்ள எண்ணை டேங்கை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட,   அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள படேரு மற்றும் புலிமேரு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா, நரசிம்மா, சாகர், பாஞ்சி பாபு, கர்ரி ராமராவ், கட்டமுரி ஜெகதீஷ் மற்றும் பிரசாத் ஆகிய 7 தொழிலாளர்கள் அடுத்தடுத்து விஷவாயு தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த 7 பேரும்,  கடந்த 10 நாட்களுக்கு முன்புதான்  பணியில் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தை ஏற்படுத்தி உள்ள எண்ணெய் தொழிற்சாலை, தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்து உங்ளளனர். உயிரிழந்த  தொழிலாளர்கள் உடல்கள் மீட்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொழிலாளர்களின் உறவினர்கள் திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு காக்கிநாடா எஸ்.பி. ரவிந்தரநாத் பாபு மற்றும் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.