சென்னை: தமிழ்நாட்டில் ரேசன் கடைகளில் காலியாக உள்ள 6,503 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என கூட்டுறவு துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காலி பணியிடங்களுக்கு  2023 பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக கூட்டுறவு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 34,790 நியாய விலைக் கடைகளில் 33,487 கடைகள் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. இந்த கடைகளில் காலியாக உள்ள 5,578 விற்பனையாளர் பணியிடங்களுக்கு 2,06,641 விண்ணப்பங்களும், 925 கட்டுநர் பணியிடங்களுக்கு 23,166 விண்ணப்பங்களும் ஆக மொத்தம் 6,503 பணியிடங்களுக்கு 2,29,807 விண்ணப்பங்கள் வரப் பெற்றுள்ளன.

மேற்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 13.10.2022-அன்று அனைத்து மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையங்கள் மூலமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெற 14.11.2022 அன்று இறுதி நாளாகும். இந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு, 2023 பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.

கூட்டுறவுச் சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக பயிர்க் கடன் அளவு ரூ.10 ஆயிரம் கோடியை தாண்டி 2021-2022-ம் ஆண்டில் 14,84,052 விவசாயிகளுக்கு ரூ.10,292.02 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை 8,44,082 விவசாயிகளுக்கு ரூ.6341.89 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 1,17,617 எண்ணிக்கையிலான மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2,755.99 கோடியில் தள்ளுபடி வழங்கும் நடவடிக்கைகள் துவங்க இருக்கின்றது.

கூட்டுறவுத்துறைக்கென தனி பயிற்சிக் கொள்கை வெளியிடப்பட உள்ளது. கூட்டுறவுத்துறை சார்பில் திண்டுக்கல்லில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 268 மாணவ-மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிக்கு ரூ.75.75 கோடிசெலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு கூட்டுறவுத் துறை அமைச்சரால் இடம் தானமாக வழங்கப்பட்டு, விரைவில் கட்டுமானப் பணிகள் துவங்கவுள்ளன.

புதிய கட்டிடத்தில் 2,500 மாணவ-மாணவியர்கள் கல்வி பெற இயலும். கூட்டுறவு நிறுவனங்களில் இதுவரை 808-க்கு மேற்பட்ட சங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டு, அதன் தொடர்ச்சியாக ரூ.365 கோடிக்கு அதிகமான சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டு, அவற்றை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. தொடர்புடைய சங்கங்கள் அனைத்திலும் உள்ள நிர்வாகக்குழு கலைக்கப்பட்டும், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டும், தொடர்புடைய நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் பணிகளும் முடிவடைந்துள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.