டெல்லி: குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க இந்தியாவில் கொண்டு வரப்பட்ட போக்சோ சட்டத்தில் இருந்து, 65%க்கும் மேற்ப்பட்ட குற்றவாளிகள் தப்பித்து வந்துள்ளனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. குற்றவாளிகள் தப்பிப்பதற்கு காரணம் சட்டத்தில் உள்ள ஓட்டையா? காவல்துறையினரின் கையாலாகாத்தனமா? என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவே போக்சோ சட்டம்  கடந்த  2012-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.  இந்த சட்டத்தின் மூலம் குழந்தைகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டபோது, ஆகா, ஓகோ என புகழப்பட்டது. ஆனால், இந்தசட்டத்தின் நடைமுறைகள் எதிர்பார்த்த அளவுக்கு பலனளிக்கிறதா ,  நடைமுறையில் அந்த நடவடிக்கை புகார்தாரர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய தீர்வைத் தருகிறதா என்றால்… இல்லை என்றே சொல்ல முடியும்.

ஏனென்றால், ‘தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரத்தின்படி, இந்த சட்டத்தின்மூலம் புகார் பதியப்பட்டவர்களில் 65 சதவிகிதம் பேர் விடுதலையாகி உள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம் சட்டத்தில் உள்ள ஓட்டையா அல்லது,  சட்டத்தின்மீது நடவடிக்கை எடுப்பதில் காவல்துறையினரின் கைலாயாகத்தனமா என்பது தெரியவில்லை.

போக்சோ சட்டத்தின்படி,  18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவனோ, சிறுமியோ இத்தகைய பாலியல் தொடர்புடைய பிரச்னைகளை மற்றவர்களிடம் இருந்து எதிர்கொண்டாலோ அதனால் மன ரீதியாக, உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டாலோ இந்த சட்டம் பாதுகாப்பு அளிக்கும். பாலியல் செயல்களுக்காக சிறார்களை கடத்தும் நபர்கள் மீதும் இந்த சட்டத்தின்மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால்,  புகார் கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்துக்குள்ளாக, அது குறித்து குழந்தைகள் நலக்குழுவின் கவனத்துக்கு காவல்துறை கொண்டு செல்ல வேண்டும். அதன் பிறகு அவர்கள் மூலம் சிறாருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ஆனால், இதுவெல்லாம் கடைபிடிக்கப்படுகிறதா….?

சமீபகாலமாக தமிழகத்தில் பல பிரபல பள்ளிகளின் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளது. மாணவர்களின் எதிர்காலத்துக்கு வழிகாட்ட வேண்டிய ஆசிரியர்களே, வழிதவறிச் செல்லும் அவலங்கள் அரங்கேறி வருகின்றன.இதில் சில பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ஒருசில பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் சுழன்று வரும் நிலையில், இந்த விவகாரங்கள்  அரசியல் ரீதியாகவும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளன.

இந்த நிலையில், தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் பாலியல் புகார்கள் மீதான நடவடிக்கை, தண்டனை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதன்படி, கடந்த 2017-ம் ஆண்டு, பாலியல் தொடர்பான   32,608 வழக்குகள் போக்சோ சட்டத்தில் பதியப்பட்டு உள்ளன. அதுபோல கடந்த  2018-ல் 39,827 வழக்குகளும், 2019-ல் 47,335 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்துள்ள வழக்குகளின் எண்ணிக்கையை பார்க்கும்போது,போக்சோ சட்டம் செயல்படுத்தப்படுகிறதா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது. ஏனென்றால், 3 ஆண்டுகளில் பாலியல் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை  46 சதவிகிதம் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே வேளையில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கூண்டில் நிறுத்தப்பட்டு வரும் நபர்களில் 65சதவிகித்திற்கும் மேற்பட்டோர், தண்டனையில் இருந்து தப்பித்து உள்ளனர் என்றும் தேசிய குற்ற ஆவணம் விவரித்துள்ளது.

ஏனென்னறால், குழந்தைகளிடம் பாலியல்  சேட்டை செய்யும் கொடூர மனம் கொண்ட ஒரு  குற்றவாளி தண்டனையில் இருந்து தப்பிப்பது என்றால், அது எவ்வளவு பெரிய அவமானம். இது போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கத்தையே அடியோடு சிதைத்துவிடுமே.

அப்படியானால், குற்றவாளிகளுக்கு சாதகமாக காவல்துறையினர் செயல்படுகின்றனரா அல்லது, போக்சோ சட்ட நுணுக்கங்கள் அவர்களுக்கு தெரியவில்லையா? அல்லது போக்சோ சட்டத்தில் ஓட்டை உள்ளதா? என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டியது அவசியம்.

‘பாலியல் குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் இடம்பெற்றுள்ளது தமிழர்களுக்கு தலைகுனிவே. இந்த பட்டியலில், கடந்த 2016-ஆம் ஆண்டு வரை 15-ஆவது இடத்தில் இருந்தது. ஆனால் இப்போது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதல் 5 இடங்களுக்குள் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் 2018-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக 4,155 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது நாடு முழுவதும் பதிவான குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 3 சதவீதமாகும். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% உயா்ந்துள்ளது. இதில் பாலியல் குற்றங்கள் மட்டும் 49% உயா்ந்துள்ளது. ஆனால், பாலியல் வழக்குகளில் நீதிமன்றமும் சரியாக செயல்படவில்லையோ என்ற எண்ணத்தை தோற்றுவித்து வருகிறது. ஏனென்றால், ஒரு ஆண்டில்  குழந்தைகளுக்கு எதிராக பதியப்படும் வழக்குகளில் 30% வழக்குகளுக்கு  தீா்ப்பு காணப்படுகிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பாலியல் வழக்கில் பல குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு  16 சதவிகிதம் அளவிலேயே தீர்ப்புகள் வழங்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டு உள்ளன. இது கடுமையான விமர்சனங்களை எழுப்பியதும்,   கடந்த 2017-ஆம் ஆண்டு 39.8 % அதிகரிக்கப்பட்டது. 2018-ஆம் ஆண்டு 41.4%, 2019-ஆம் ஆண்டு 52.9 % மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு மொத்தம் 102 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 54 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தமிழகச் சிறைகளில் மரண தண்டனை பெற்று காத்து இருப்பவா்களில் 50% போ் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவா்கள் என காவல்துறையினா் தெரிவிக்கின்றனா்.

அதே வேளையில், பாலியல் வன்கொடுமை கொலைகளுக்கு மரண தண்டனை தீா்வாகி விடுமா என்பது குறித்த விவாதங்களும் போய்க்கொண்டிருக்கிறது. மனித உரிமை ஆா்வலா்கள்  மரணத்தண்டனைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். ஆனால்,  சமூகத்தின் புற்றுநோய்போல பரவிக்கொண்டிருக்கும் பாலியல் குற்றங்களுக்கு முடிவு கட்ட வேண்டிய காலமும் நெருங்கி விட்டது.

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை பலர் தவறான பாதைக்கு கொண்டு செல்வதே இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகரிக்க காரணம் குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாகவே பாலியல் வன்கொடுமை வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதை சரி செய்யப்போவது யார், எப்போது? சட்டம் தனது கடமையை செய்யுமா? காவல்துறையினர் மனசாட்சிப் படி பணி செய்வார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது.

நாட்டையே உலுக்கும் பாலியல் வன்புணர்வு சம்பவங்களை தொடர்ந்து, 12வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனையை விதிக்கும் வகையிலான சட்டத் திருத்தம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டங்களை சரியான முறையில் கையாளதாதலேயே குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

பாலியல் குற்றங்களுக்கு  இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் போன்ற நாடுகளில் தூக்கிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் நிலையில், வளைகுடா நாடுகளில் வாளால் தலை வெட்டி எடுக்கப்படும் முறை உள்ளது. புருனே நாட்டில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் கல்லால் எறிந்து சாகடிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது என்பது அனைவரும் அறிந்திருக்கிறோம்.

ஆனால், இந்திய சட்டங்கள், பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான வகையில் தீர்ப்பு வழங்க நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள் ஏற்படுத்தும் தடைகள்,  தீர்ப்புக்கு எதிரான மே……..ல் முறையீடு,. கருணை மனு போன்ற  சட்டங்களைக் காட்டி, குற்றவாளிகள்  காலதாமதப்படுத்துவதும் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரிக்க காரணமாக  அமைந்து வருகிறது.  இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இதுபோன்ற குற்றங்களை தடுக்க, காவல்துறை, நீதித்துறை, அரசு அதிகாரிகள் ஒற்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்பதுடன், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், மேலும்,  சமுதாய அணுகுமுறைகளிலும் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். இதுவே பாலியல் குற்றங்கள் குறைவதற்கான ஒரே வழி.

பூனைக்கு மணி கட்டப்போவது யார்?