சென்னை

மிழகத்தில் ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளைத் திறக்க தமிழக வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரண்டாம் அலை பரவல் காரணமாகத் தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  பரவல் குறையாததால் தளர்வுகள் நீக்கப்பட்டு முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டது.   தற்போது 27 மாவட்டங்களில் கொரோனா பரவல் பெருமளவில் குறைந்துள்ளது.  எனவே இந்த பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சிறிய கடைகள், டாஸ்மாக், தேநீர்க்கடைகள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பெரிய கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.  தற்போதைய தளர்வுகளின்  படி 1000 சதுர அடிக்குக் குறைவான பரப்பளவு உள்ள கடைகளை மட்டும் நிபந்தனைகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.  இங்கு சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல் போன்றவை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

நேற்று தமிழக வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன், “ஆரம்பத்தில் தமிழகத்தில் நாளொன்றுக்கு கொரோனா பரவல் 36 ஆயிரமாக இருந்தது.  அரசின் சிறப்பான செயல்பாடு காரணமாகத் தொற்று குறைந்து வருகிறது. தமிழக அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்போதைய காலகட்டத்தில் திருமணம் அதிகமாக நடக்கும் என்பதால் 1000 சதுர அடி கொண்ட துணிக்கடைகள், நகைக்கடை, காலணி கடைகளைத் திறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் வேண்டும்.” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.