திருவனந்தபுரம்: சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க ஏராளமானோர் காத்திருப்பதால், டிசம்பர் 20-ந் தேதி முதல்  தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த காலக்கட்டத்தில் கோவிலுக்கு வருவது வழக்கம். ஆனால், கொரோனா தொற்று காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டுமே முன்பதிவுடன்  தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கூடுதலாக மேலும் பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட கோரி கேரள  உயர்நீதிமன்றத்தில்,  காங்கிரஸ் பிரமுகர் அஜய் தரையில் மற்றும் அய்யப்பா சேவா சமாஜம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவின் விசாரணையின்போது, கேரள அரசு சார்பில்,  சபரிமலையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அர்ச்சகர்களுக்கு தொற்று ஏற்பட்டால் கோவில் நடையை அடைக்க வேண்டிய நிலை ஏற்படும், அதனால், பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.

இதற்கு எதிர்தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், வருகிற 20-ந் தேதி முதல் தினசரி 5 ஆயிரம் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து செய்தியளார்களிடம் பேசிய திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு, கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்பதாகவும், 20-ந் தேதி முதல் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

மேலும்,  கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது குறித்து, தலைமைச் செயலாளர் தலைமையிலான நிபுணர் குழு முடிவு செய்வார்கள் என்றும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 10 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.