ஆமதாபாத்:

500, 100 ரூபாய் நோட்டு வாபஸ் என்பது சட்டபூர்வமான திருட்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சாடியுள்ளார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் மன்மோகன் சிங் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

“நாட்டு மக்களை பெரிதும் பாதித்த, 500, 100 ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்டு நாளையுடன் ஒருவருடம் நிறைவடைகிறது.  இந்த திட்டத்தினால், கிடைத்த லாபம் மற்றும் பலன் குறித்து மத்திய அரசு புதிதாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த திட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில்  நான் ஏற்கனவே கூறியதை திரும்பி கூறுகிறேன். ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் என்பது அங்கீகரிக்கப்பட்ட கொள்ளை. சட்டப்பூர்வமான திருட்டு.

இந்த உயர் மதிப்பு ரூபாய் நோட்டு வாபஸ் காலகட்டத்தில் இந்திய மக்கள், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை வாங்கினர். 2016- 17 காலத்தில் சீன பொருட்களின் இறக்குமதி ரூ.1.95 லட்சம் கோடி ஆகும்.  ஆனால், 2017 – 18 காலகட்டத்தில் இது ரூ.2.41 லட்சம் கோடியாக உயர்ந்தது.  நாட்டின் வளர்ச்சி குறைந்ததற்கும், இறக்குமதி 23 சதவீதம் அதிகரித்ததற்கும் ரூபாய் நோட்டு வாபசும், ஜிஎஸ்டியும் முக்கிய காரணங்களாகும்.

புல்லட் ரயில் திட்டம் வீண் பெருமைக்காக கொண்டு வரப்பட்டிருக்கிறது.  இதற்கு பதிலாக,  அகல ரயில் பாதை குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தாதது ஏன்?

புல்லட் ரயில் திட்டத்தை எதிர்ப்பவரை நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர் எனவும், ஜிஎஸ்டி ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் எதிர்ப்பவர் வரி ஏய்ப்பாளர் எனவும் பேசுவது  ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது” என்று மன்மோகன் சிங் பேசினார்.