கொல்கத்தா: நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையால் நாட்டில் பலரும் அவதியுற்று வரும் நிலையில், துர்கா பூஜையை முன்னிட்டு துர்கா சிலைகளை அலங்கரிக்க 50 கிலோ தங்கம் மற்றும் 110 கிலோ வெள்ளி பயன்படுத்தப்படுகிறது.

தற்போதைய நிலையில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.40000 ஐ நெருங்கிவிட்டது. ஆனால், இதனாலெல்லாம் பாதிக்கப்படாதவர்களாக இருக்கும் துர்கா பூஜை ஏற்பாட்டாளர்கள், தங்கம் மற்றும் வெள்ளியை வாரியிறைக்கிறார்கள்.

துர்கா பூஜை அலங்காரத்திற்காகப் பயன்படுத்தும் தங்கத்தின் மதிப்பு ரூ.20 கோடிகள் என்று கூறப்படுகிறது. மொத்தம் 13 அடி நீளமுள்ள துர்கா சிலையின் தலை முதல் பாதம் வரை அலங்கரிக்க தங்கத் தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

துர்காவின் சிங்கம் மற்றும் மகிஷாசுரா ஆகியோர் தங்கத் தாள்களால் அலங்கரிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது. மேலும், இந்தாண்டின் மிகவும் விலையுயர்ந்த சிலை இதுவாகும் என்றும் தெரிவிக்கிறார்கள் பூஜை கமிட்டியினர். இந்த பூஜை நிகழ்வு கொல்கத்தாவின் சந்தோஷ் மித்ரா சதுக்கத்தில் நடைபெறுகிறது.