நங்கநல்லூர் கோயில் குளத்தில் 5 அர்ச்சகர்கள் மூழ்கி இறந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

25 க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் சாமி சிலையுடன் குளத்தில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி வட்டமாக நின்று மூன்று முறை மூழ்கி எழுந்தனர்.

குளத்திற்குள் பூக்கள் தூக்கி வீசப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக அங்கிருந்த அர்ச்சகர் ஒருவர் தண்ணீரில் தத்தளித்ததை அடுத்து அவரைக் காப்பாற்ற நான்கு பேர் உதவிக்கு சென்றனர்.

மற்ற அர்ச்சகர்கள் மற்றும் தீர்த்தவாரியை காண வந்திருந்த பக்தர்கள் என ஏராளமானோர் குழுமி நின்று வேடிக்கை பார்க்க அந்த ஐந்து பேரும் உயிருக்கு போராடியபடியே தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜி.சூர்யா வயது 24 மற்றும் ராகவன் 22, நங்கநல்லூரைச் சேர்ந்த ராகவன் 18, கீழ்கட்டளையைச் சேர்ந்த யோகேஸ்வரன் 23, மற்றும் நங்கநல்லூரைச் சேர்ந்த வனேஷ் 20 ஆகியோர் இறந்ததாக உறுதிசெய்யப்பட்டது. இதில் வனேஷ் கல்லூரி மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.