தேர்தல் மைய பள்ளிகளை குப்பை கூளமாக்கிச் சென்ற அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுகாதாரத்தை பேணுவது குறித்து யூ.கே.ஜி. மாணவி ஒருவர் பாடமெடுத்துள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ம் தேதி நடைபெற்றது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இந்த வாக்குப்பதிவுக்காக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பெற்றுது.

வேட்பாளர்கள், வாக்குச்சாவடி விவரங்கள் உள்ளிட்டவை பள்ளி சுவர்களில் ஆங்காங்கே ஒட்டப்பட்டன.

தவிர, வாக்குப்பதிவு இயந்திரம், கண்காணிப்பு கேமரா, மின்விசிறி உள்ளிட்ட இதர உபகரணங்களும் பொருத்தப்பட்டன.

தேர்தல் நடத்தும் அரசு அதிகாரிகள் முன்தினம் இரவே வாக்குச்சாவடிக்கு வந்து தங்கிய நிலையில் அவர்களுக்கு தேவையான கழிவறை மற்றும் உணவு, குடிநீர் வசதிகளும் செய்து தரப்பட்டது.

இந்த நிலையில் தேர்தல் முடிந்த பிறகு வாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்ற தேர்தல் ஆணைய அதிகாரிகள் பள்ளிகளில் மேற்கொண்ட மாற்றங்களை மறுசீரமைக்காமல் கழிவுகளையும் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர்.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதை அடுத்து இதுகுறித்து 5 வயதே ஆன பள்ளி மாணவி ஒருவர் மிகவும் வேதனையுடன் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.